

செரேம்பான் (மலேசியா)
மலேசிய வன ரிசார்ட்டிலிருந்து மர்மமான முறையில் காணாமல் போன லண்டன்வாழ் ஐரிஷ் சிறுமியை ஐந்தாவது நாளாக சிறப்பு போலீஸார் தேடி வருகின்றனர்.
மலேசியாவின், தெற்கு நெகேரி செம்பிலன் மாநிலத்தில் கோலாலம்பூருக்கு தெற்கே 63 கிலோமீட்டர் (39 மைல்) தொலைவில் உள்ள வனப்பிரதேசம் அழகும் அடர்த்தியும் கொண்டது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இங்குள்ள ரிசார்ட்களில் வாரக் கணக்கில் தங்கி ஓய்வு நாட்களைக் கழிப்பது அவர்கள் வழக்கம். லண்டன் வாழ் ஐரீஷ் குடும்பம் ஒன்று இரண்டு வாரங்கள் தங்கிச்செல்ல கடந்த சனிக்கிழமை இந்த வனப்பகுதிக்கு வந்தது. பலாத்தோட்டம் சூழ
அமைந்திருந்த துசுன் சுற்றுச்சூழல் ரிசார்ட்டில் அக்குடும்பத்தினர் தங்கியிருந்தனர்.
கடந்த ஞாயிறு அன்று அதிகாலை அவர்களது 15 வயது மகள் திடீரென காணாமல் போனார். மகள் காணாமல் போனது குறித்து மலேசிய போலீஸாருக்கு பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து செனோய் பிராக் சிறப்புக் காவல் படைக்குழு காட்டுக்குள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் அதிகாரி நோர் மார்சுகே பெஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் ரிசார்ட் காட்டேஜ்ஜில் இருந்த மகள் காணாமல் போனது குறித்து பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் அவர் காணாமல் போன நபர். ஆனால் சிறுமி காணாமல் போனதில் ஏதாவது புதிய தகவல் கிடைத்தால் அதிலிருந்து புதிய கோணத்தில் தேடலைத் தொடர்வோம்.
மாயமாகி 5 நாட்கள் கடந்த நிலையில், காட்டுக்குள் மாயமான சிறுமியை தேடும் பணி மேலும் தீவிரமடைந்துள்ளது. மீட்பு நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோர் இரவுபகலாக ஈடுபட்டுள்ளனர். தேடல் பணியில் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்நிலைகளைத் தேடும் முயற்சியில் சிறுமி சென்றிருக்கக் கூடும் என்ற அனுமானத்தில். ரிசார்ட்டின் கீழே மலை அடிவாரத்தில் உள்ள ஆற்றங்கரையைக் கடந்தும் தேடல் விரிவடைந்துள்ளது,உள்ளூர் பழங்குடியினரையும் போலீஸார் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்”.
இவ்வாறு மாவட்ட காவல் அதிகாரி தெரிவித்தார்.
வீடியோவில் பெண்ணின் அத்தை உருக்கமான வேண்டுகோள்
குய்ரினின் பெற்றோர் ஐரிஷ்-பிரெஞ்சு தம்பதியினர், இவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகின்றனர். வெளிநாடுகளில் நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களை ஆதரிக்கும் ஒரு பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான லூசி பிளாக்மேன் அறக்கட்டளை இத்தகவலை தெரிவித்துள்ளது.
லூசி பிளாக்மேன் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், பெண்ணின் அத்தை மிகவும் உருக்கமாக பேசியது காண்போரை நெகிழ வைத்தது.
''எங்கள் குடும்பம் நிலைகுலைந்துள்ளது. இதனால் முழு குடும்பமும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த நேரத்தில் பெண்ணின் தாய் தந்தையர் இருவரும் தங்களுக்குள்ளாகவே பித்துப் பிடித்ததுபோல பேசிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நோரா இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை. அவள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவள். ஏதாவது ஒன்று என்றால் அவளால் தாங்கமுடியாது. அவளை வீட்டிற்கு அழைத்து வர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்" என்றார் காணாமல் போன பெண்ணின் அத்தை.
விசாரணை
தேடும் பணிகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். காட்டேஜில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைகளை தடயவியல் குழு ஆய்வு செய்து வருகிறது.