

சோமாலியாவில் நாடாளுமன்றத் தின் மீது ஷெபாப் தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையினர் சனிக்கிழமை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகளும் 4 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஹுசைன் கூறுகையில், "தலைநகர் மொகதிஷுவில் உள்ள நாடாளுமன்றத்தின் நுழைவாயிலுக்கு வெளியே ஒரு கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதன் பிறகு தீவிரவாதிகள் சிலர் அங்கிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
மேலும், இந்தத் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக ஏஎப்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதை ஷெபாப் அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் அஜீஸ் அபு முசாப் ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் கூறுகையில், "சோமாலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றம் மீது எங்கள் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல் முடிவுக்கு வந்ததும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிடப்படும்" என்றார்.
சர்வதேச நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சோமாலிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசு அலுவலகங்கள், பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஷெபாப் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 2 எம்.பி.க்களை ஷெபாப் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.