Published : 07 Aug 2019 02:57 PM
Last Updated : 07 Aug 2019 02:57 PM

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

ஏஎன்ஐ

மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு சுஷ்மா ஸ்வராஜுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்தபோது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தலைவர்களின் இரங்கல்:

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா: சுஷ்மா வங்கதேசத்தின் சிறந்த நண்பராக இருந்தார். அவருடைய இறப்பின் மூலம் வங்கதேசம் சிறந்த நண்பரை இழந்துவிட்டது. இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றதில் சுஷ்மா ஸ்வராஜின் பங்களிப்பை நாங்கள் என்றும் நினைவுகூர்வோம்.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப்: இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணத்திற்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பதவியில் இருக்கும்போது நான் அவருடன் பல பயனுள்ள உரையாடலை நிகழ்த்தி இருக்கிறேன். அவருடைய திடீர் மரணம் என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுஷ்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மன்: சுஷ்மா ஸ்வராஜின் மரணம் என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் நிச்சயம் நினைவுகூரப்படுவார்.

பஹ்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் காலித் பின் அகமத்: என்னை எப்போதும் சகோதரன் என்று அழைத்த இந்தியத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் இனி உயிருடன் இல்லை. இந்தியாவும், பஹ்ரனைனும் உங்களை நிச்சயம் நினைவுகூரும்.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம்: இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவின் மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x