Published : 06 Aug 2019 04:50 PM
Last Updated : 06 Aug 2019 04:50 PM

தலிபான்களுடன் அமெரிக்கா மைல்கல் ஒப்பந்தம்: 18 ஆண்டுகால போர்ச்சூழல் மாறுமா? ஆப்கானில் அமைதி திரும்புமா?

அமைதித் தூதர் ஜல்மே காலிஸாத். | ஏ.பி.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தன் படைகளை திரும்பப் பெறுவது குறித்துத் தலிபான்கள், அமெரிக்க அரசு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிற தீவிரவாத குழுக்களிடமிருந்து தங்களை தலிபான்கள் துண்டித்துக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளதாக தலிபான் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கத்தாரில் கடந்த 2 நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இங்கு தலிபான் அரசியல் அலுவலகம் ஒன்றை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்கத் தரப்பிலிருந்து இது குறித்து இன்னும் விரிவான தகவல்கள் வரவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் “பிரமாதமான முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

தோஹாவில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அமைதித் தூதர் ஜல்மே காலிஸாத் இந்த 18 ஆண்டுகால போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். படைகளை வாபஸ் வாங்குவது மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் ஆகியவை இவரது முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

காலிஸாத் ஓராண்டுக்கு முன்பாக அமைதித் தூதராக நியமிக்கப்பட்டார், ஆனாலும் தலிபான்கள் தினசரி நடத்தும் பயங்கரமான தாக்குதல்களை நிறுத்தவில்லை. அதாவது பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருந்தது. 2001 முதல் ஆப்கானில் பெரும் பலம் பெற்ற தலிபான்கள் தற்போது பாதி ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது அமைதி ஒப்பந்தம் ஏற்படும் சூழல் நிகழ்ந்துள்ளது, இதன் மூலம் அமெரிக்கப் படைகள் ஆப்கானிலிருந்து தங்கள் படைகளை வாபஸ் பெறவேண்டும், தலிபான்கள் மற்ற தீவிரவாத அமைப்புகளிடமிருந்து தங்களை துண்டித்துக் கொள்ள வேண்டும்.

அமைதி ஒப்பந்தம் செப்டம்பர் 1ம் தேதியன்று இறுதி செய்யப்பட்டும் என்று அமைதித் தூதர் காலிஸாத் தெரிவித்தார். சுமார் 20,000 வீரர்கள் கொண்ட நேட்டோ, அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து வருகின்றன. இதில் 14,000 அமெரிக்க படைகள் அடங்கும்.

2014-லேயே தங்கள் போர் பணியை அமெரிக்க நேட்டோ படைகள் முடித்துக் கொண்டன, ஆனால் ஆப்கன் ராணுவத்தை வலுப்படுத்தும் பயிற்சியில் அமெரிக்க மற்றும் கூட்டணி படைகள் ஈடுபட்டு வருகின்றன. ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போர்முறைகளும் ஆப்கான் ராணுவத்துக்கு கற்றுக் கொடுக்கபட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆப்கானில் அமெரிக்கப் படைகள் இருப்பதை விரும்பவில்லை என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளார், இந்நிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் நிச்சயம் ஆப்கான் தன் போர்ச்சூழலிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x