Published : 06 Aug 2019 01:35 PM
Last Updated : 06 Aug 2019 01:35 PM

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இம்ரான் கான் வரவில்லை; கூட்டம் பாதியில் நிறுத்தம்

இஸ்லாமாபாத்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை திரும்ப பெறும் இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டம் இனறு கூடியது. ஆனால் கூட்டத்துக்கு பிரதமர் இம்ரான் கானே வராததால் பாதியில் நிறுத்தப்பட்டது.

காஷ்மீர் இந்தியாவின் அதிகாரபூர்வ பகுதி அல்ல, சர்ச்சைக்குரிய பகுதி என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஐ.நா. உட்பட பல இடங்களில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பிறநாடுகளும், ஐ.நா. அமைப்பும் தலையிட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில், காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 61 எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஒரு எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

இதைத் தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்பபெறும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதுபற்றி கூறுகையில் ‘‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்க முடியாது’’ என எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடி விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை கூட்ட அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்து இருந்தார். 

அறிவித்தபடி இன்று காலை 11:00 மணியளவில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து கூட்டம் நிறுத்தப்பட்டது. சபாநாயகர் அவையை விட்டு வெளியேறி தனது அலுவலகத்துக்கு சென்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x