சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: ஏமன் கிளர்ச்சியாளர்கள் ஊடகம் தகவல்

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: ஏமன் கிளர்ச்சியாளர்கள் ஊடகம் தகவல்
Updated on
1 min read

ஏமன் கிளர்ச்சியாளர்கள் சவுதியின் விமான நிலையம் மற்றும் விமான தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் அல் மாசிரா தொலைக்காட்சி திங்கட்கிழமை வெளியிட்ட செய்தியில், “ சவுதியில் உள்ள அபா மற்றும் நஜ்ரன், விமான நிலையங்களிலும், கிங் கலித் விமான தளத்திலும் சவுதிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதல் நடத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.  இந்தத் தாக்குதல் குறித்து சவுதியின் அதிகாரபூர்வ இணையப் பக்கங்களில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. 

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதில் தொடர்ந்து சவுதியின் விமான நிலையங்களைக் குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அபா விமான நிலையம்  அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in