

வளைகுடா பகுதியிலிருந்து எரிபொருளைக் கடத்திச் சென்றதாக சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து ஈரான் தரப்பில், “வளைகுடா பகுதியிலிருந்து எரிபொருளை அரபு நாடுகளுக்கு கடத்திச் செல்ல முயன்ற கப்பல் ஒன்றை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது. சிறை பிடிக்கப்பட்ட டேங்கரில் 7 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது. மேலும் அந்த டேங்கரிலிருந்த 7 மாலுமிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் பாதை விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த கப்பல் ஒன்றை ஈரான் சிறைபிடித்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் மோதல் உருவானது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் ஈரான் கடத்தியிருக்கும் மூன்றாவது கப்பல் இதுவாகும்.
முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி
இந்நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் ஈரான் இதனை மறுத்து வந்தது.
ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.