

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
ஓஹியோ மாகாணம், ஒரேகான் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''ஆயுதம் தாங்கிய நபர் ஒருவர் திடீரென நள்ளிரவில் தாக்குதலில் ஈடுபட்டார். இதில் 9 பேர் உயிரிழந்தனர். 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கொலையாளியும் இதில் உயிரிழந்திருக்கக் கூடும். அவரின் அடையாளங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை'' என்றனர்.
மேற்கு ஓஹியோவில் இருக்கும் டெய்ட்டன் பகுதியில் சுமார் 1.40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதற்கு அருகாமையில் உள்ள ஒரேகான் பகுதியில்தான் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 3) டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் கடையில் இளைஞர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
2019-ம் ஆண்டில் பொதுமக்கள் மீது நடைபெறும் 22 -வது தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதல்களில் இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் தாக்குதல்களால் அமெரிக்காவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.