மெக்ஸிகோவில் எரிவாயு கசிவு: கிராம மக்கள் 2000 பேர் வெளியேற்றம்

மெக்சிகோ நாட்டின் கிராமம் ஒன்றில் பரவிய எரிவாயு.
மெக்சிகோ நாட்டின் கிராமம் ஒன்றில் பரவிய எரிவாயு.
Updated on
1 min read

மெக்சிகோ சிட்டி

மெக்சிகோ கிராமம் ஒன்றின் வழியாகச் செல்லும் பைப் லைனிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதால் கிராமத்தைச் சேர்ந்த 2,000 பேர் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்த விவரம்:

“மெக்சிகோ சிட்டிக்கு வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக எரிவாயு பைப்லைன் செல்கிறது. அப்பகுதியில் திடீரென வாயு கசியத் தொடங்கியது. திடீரென ஏற்பட்ட வாயுக் கசிவிலிருந்து பெரிய அளவில் வாயு புகை வெளியேறியது. அது காற்றின் மூலம் பரவி சுற்றிலுமுள்ள வயல்வெளிகள் குடியிருப்புகளுக்கும் பரவியது.

அருகிலிருந்த நெடுஞ்சாலையிலும் வாயுக் கசிவு பரவியது. நெடுஞ்சாலை மற்றும் ரயில்பாதைகளில்  150 மீட்டர் நீளத்திற்கு வாயுக் கசிவின் புகைமூட்டம் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அபாயகரமான இந்த வாயுக் கசிவினால் பாதிக்கப்படாமல் இருக்க, உள்ளூர் மக்கள் 2000 பேர் பாதுகாப்பு அதிகாரிகளால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

கிராமத்தில் ஆபத்தான நிலையில் வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில், பைப்லைனில் செலுத்தப்பட்ட எல்பி வாயு உடனடியாக நிறுத்தப்பட்டதாக அரசாங்கத்திற்கு சொந்தமான பெமெக்ஸ் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதில் ஏற்பட்ட கோளாறுகளை பழுதுபார்க்க உத்தரவிடப்படுவதற்கு முன்பாக பைப்லைனில் மீதமுள்ள வாயு முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டது.

வயல்களில் பரவியிருந்த எரிவாயுவால்  தீப்பிடிக்காமல் இருக்க அவசரகால மீட்புப் பணியாளர் தண்ணீர் ஊற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வாயுக் கசிவு சம்பவத்திற்கு எரிபொருள் திருடர்கள் சிலர் சட்டவிரோதமாக எரிவாயுவை திருட பைப்லைனில் துளையிட்டுள்ளதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோவில் எரிவாயு திருட்டுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த ஆண்டு மட்டும் எரிவாயு செல்லும் பைப்லைன்களில் 8,000-க்கும் மேற்பட்ட குழாய் இணைப்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

பெட்ரோல் அல்லது டீசல் ஏற்றிச்செல்லும் பைப்ன்லைன்களிலிருந்து சட்ட விரோத குழாய்கள் இணைத்து திருடப்படுவது இங்கு சாதாரண நிகழ்வாகிவிட்டது. ஆனால் தற்போது இயற்கை எரிவாயுவும் திருடப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in