சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் போர் நிறுத்தம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் போர் நிறுத்தம்
Updated on
1 min read

சமாதான அறிவிப்பை தொடர்ந்து சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வான்வழித் தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டுப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் அரசுப் படை கடந்த சில மாதமாக தீவிரமான தாக்குதலை அரசுப் படைகள்  நடத்தி வருகின்றது.

இந்த  நிலையில்  கிளர்ச்சியாளர்களுடன்  போர் நிறுத்தத்திற்கு அரசு தரப்பில் சம்மதம் தெரிவித்துள்ளதால் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சிரிய போர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கடைசிப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை  சமீபத்தில் தெரிவித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மூத்த தலைவர் மிச்செல்லாவும் சிரிய அரசின் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக  உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஆசாத் அமைப்புக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இதில் சிரியாவின் வடகிழக்குப் பகுதியான இட்லிப் மாகாணம்  மட்டும் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது. இதனை மீட்க அரசுப் படைகள் ரஷ்யாவுடன் இணைந்து கடுமையாகப் போரிட்டு வருகின்றன.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in