Published : 02 Aug 2019 10:39 AM
Last Updated : 02 Aug 2019 10:39 AM

எங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தார் ஹம்ஸா பின்லேடன்: அதிபர் ட்ரம்ப் சூசகம்

வாஷிங்டன்,

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்தார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். 

ஆனால், ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துவிட்டார்.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் கொன்ற பின் அச்சுறுத்தலாக இருந்தவர் அவரின் மகன் ஹம்ஸா பின்லேடன். 

தனது தந்தை இறந்தபின் அல்கொய்தா தீவிரவாத அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்ற ஹம்ஸா பின்லேடன், அவ்வப்போது வீடியோ வெளியிட்டு அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் , அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ஹம்ஸா பின்லேடன் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ஊடகங்கள் நேற்று வெளியிட்ட செய்தியில், கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்பாகவே ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்று என்பிசி சேனல், தி நியூயார்க் டைம்ஸ் ஆகியவை செய்தி வெளியிட்டன. ஆனால், அதுகுறித்து அமெரிக்க அரசு சார்பிலும், வெள்ளை மாளிகையும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. 

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் நேற்று நிருபர்கள் ஹம்ஸா பின்லேடன் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அதிபர் ட்ரம்ப் பேசுகையில், " ஹம்ஸா பின்லேடன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், அமெரிக்காவுக்கு ஹம்ஸா பின்லேடன் மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வந்தார். எங்களுடைய நாட்டுக்கு எதிராக பல மோசமான செயல்களையும், விஷயங்களையும் செய்தும், பேசியும் வந்தார் " எனத் தெரிவித்தார்.

ஆனால், ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டாரா என்பது குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துவிட்டார்.

பிடிஐ

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x