Published : 01 Aug 2019 05:39 PM
Last Updated : 01 Aug 2019 05:39 PM

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் கைது

லாகூர்

பாகிஸ்தானின் டேரா காஸி கான் நகரில் உளவு பார்த்து வந்ததாக இந்தியர் ஒருவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸ் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்ததாவது:

பலூசிஸ்தான் மாகாணத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இந்தியர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். 

அந்த இளைஞர் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு சென்றுள்ளார். மாகாணத்தின் முக்கிய நகரமான டேரா காஸி கான் நகரத்திற்குள் நுழையும்போது அவர் கைது செய்யப்பட்டார். இந்நகரம் லாகூரிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது. 

டேரா காஸி கான் நகரத்தின் ராக்கி காஜ் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையின்போது உளவு பார்க்க வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். 

உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞரின் பெயர் ராஜூ லக்ஷமண். மேல் விசாரணைகளுக்காக அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அழைத்துச் செல்லப்பட்ட இடத்தை போலீஸார் குறிப்பிடவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் எப்பகுதியைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

உளவு பார்ப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றம். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியரான ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்றம் அதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்க்து. 

- பிடிஐ


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x