Published : 01 Aug 2019 10:34 AM
Last Updated : 01 Aug 2019 10:34 AM

ஒசாமா பின் லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டாரா?


வாஷிங்டன்
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த செய்தியையும் தெரிவிக்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஹம்ஸா உயிருடன் இருக்கிறாரா அல்லது உயிரிழந்துவிட்டாரா, அவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. 

இந்த செய்தி முதலில் அமெரிக்காவின் என்பிசி சேனலில் வெளியானது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் நேற்று நிருபர்கள் ஹம்ஸா பின்லேடன் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அதிபர் ட்ரம்ப் பதில் அளிக்கையில் " என்னால் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க இயலாது" எனத் தெரிவித்துவிட்டார். மேலும், அதிபர் மாளிகையும் இதுதொடர்பாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

ஆனால், என்பிசி சேனல் வெளியிட்ட செய்தியில், " கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார். இதை 3 அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்" எனத் தெரிவித்தனர்.
இதேபோல, ஏஃஎப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியிலும், ஹம்ஸா பின்லேடன் இறந்த செய்தியை இரு இராணுவ உயரதிகாரிகள் உறுதிசெய்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க பாதுகாப்புத்துறை ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், ஹம்ஸா பின்லேடன் குறித்து தகவல் தெரிவித்தாலோ அல்லது இருப்பிடத்தை கூறினாலோ 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு முன்பாகவே ஹம்ஸா கொல்லப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.


ஒசாமா பின்லேடனுக்கு இருக்கும் 20 குழந்தைகளில் 3-வது மனைவிக்கு பிறந்த மகன்தான் ஹம்ஸா பின் லேடன். 30வயதாகும் ஹம்ஸா பின்லேடன் அல்கொய்தா அமைப்பின் வளர்ந்துவரும் தலைவராக இருந்தார். தனது தந்தையின் மரணத்துக்கு காரணமான அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம், இன்னும் சில நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹம்சா பின் லேடன் சில வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.


பாகிஸ்தானின் அபோதபாத்தில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது, அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை அமெரிக்க ராணுவத்தினர் கைப்பற்றினார்கள். அதில், ஹம்சா பின்லேடன் ஈரானில் உறவினர் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார் எனும் செய்தி தெரியவந்தது. அதன்பின் அங்கிருந்து ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் ஹம்ஸா இடம் பெயர்ந்தாகதும் தகவல் வெளியானது.

இதற்கிடையே தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில், ஹம்ஸா இறப்புக்கு அமெரிக்க ராணுவத்தின் பங்கு மிக முக்கியம் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், ஹம்ஸா கொல்லப்பட்டதாக செய்திகள் மட்டுமே வரும் நிலையில் எவ்வாறு கொல்லப்பட்டார் என தகவல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x