மலைப்பாதையில் சைக்கிளில் சென்றபோது கடத்தல்: மீண்டுவந்த ஆஸ்திரிய வீராங்கனையின் த்ரில் அனுபவம்
ஆஸ்திரியாவில் தடகள வீராங்கனை ஒருவர் டிரையத்லான் போட்டிக்காக மலைப்பாதையில் தனியே சைக்கிளில் சென்றபோது காரில் கடத்தப்பட்டார். அவர் மீட்கப்பட்டு கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை நட்டாலி பிர்லி (27). திருமணமான இவருக்கு 4 மாதக் குழந்தையும் உள்ளது. இவர் கடந்த வாரம் அங்கு நடந்த டிரையத்லான் விளையாட்டில் கலந்துகொண்டார். டிரையத்லான் விளையாட்டுப் போட்டி தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் சைக்கிள், நீச்சல், ஓட்டம் ஆகிய விளையாட்டுகளைக் கொண்டது.
சம்பவம் நடந்த அன்று ட்ரையத்லான் போட்டியில், முதல் கட்டமான சைக்கிள் ஓட்டத்தில் தனது சைக்கிளை ஓட்டியபடி பிர்லி சென்று கொண்டிருந்தார். ஆஸ்திரியாவில் ஆள் நடமாட்டமில்லாத மலைப்பாதை ஒன்றில் சென்றபோது பிர்லி எதிர்பாராதவிதமாக கடத்தப்பட்டார்.
எதிரே வேகமாக வந்த கார் ஒன்று பிர்லி மீது மோதியது. கீழே விழுந்து காயமடைந்த பிர்லியை, காரை ஓட்டிவந்த நபர் இழுத்து காரின் பின்னிருக்கையில் தள்ளி டேப் ஒன்றினால் கை, கால்களை இறுகிக் கட்டி கடத்திச் சென்றார்.
மயக்க நிலையில் இருந்த பிர்லியை அந்த நபர் அவர் வீட்டுக்கு கடத்திச் சென்று அடைத்து வைத்திருந்தார். அவரிடம் நைச்சியமாகப் பேசிய பிர்லி, அங்கிருந்து தப்பி அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு, தொலைபேசியில் தன் கணவருக்கு போன் செய்துள்ளார்.
பின்னர் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் ஆஸ்திரியாவின், கோப்ரா சிறப்புப் படை போலீஸார் அங்கு வந்து மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டவரைக் கைது செய்தனர்.
கடத்தப்பட்டது குறித்து கிரான் செய்தித்தாளுக்கு பிர்லி அளித்த பேட்டியின் விவரம்:
''கார் மோதியதில் என் கை உடைந்துவிட்டது. காரை ஓட்டி வந்த நபர் ஒரு கம்பால் அடித்து என்னைக் காரின் பின் இருக்கைக்குத் தள்ளினார். சிறிது நேரத்தில் நான் சுய நினைவை இழந்தேன். மயக்கம் தெளிந்தபோது நான் ஒரு வீட்டுக்குள் இருந்தேன். ஆடைகள் ஏதுமின்றி இருக்கையில் அமரவைக்கப்பட்டு கயிறு ஒன்றினால் நான் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தேன்.
என்னிடம் மிகவும் வெறுப்போடு நடந்துகொண்ட அந்த நபர் என் கண்களைக் கட்டிவிட்டு மது அருந்துமாறு கட்டாயப்படுத்தினார். அவர் கையில் கத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த நபர் எனது மூக்கு மற்றும் வாயைக் கைகளால் அழுத்தினார். என்னை மூச்சுத் திணறவைத்து சாகடிக்க முயல்வது தெரிந்தது.
ஆனால் நான் திணறத் தொடங்கிய பிறகு அந்த நபர் அப்படி செய்வதை விட்டுவிட்டார். பின்னர் குளிர்ந்த நீர் இருந்த ஒரு குளியல் தொட்டியில் அழுத்தி என்னை மூழ்கடிக்க முயன்றார். பின்னர் விட்டுவிட்டார். அதன்பின்னர் அவர் தன்மையோடு பேசினார். அந்த நபர் ஒரு தோட்டக்காரராம். சாதாரணமாகப் பேசத்தொடங்கிய அவர், தன்னுடைய மோசமான வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு அவருடைய தந்தை இறந்துவிட்டார். இதனால் தாய் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். அந்த நபரின் காதலியும் அவரை ஏமாற்றியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டதாகக் கூறிய அவர் என்னை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.
கயிற்றையும் அவிழ்த்து சுதந்திரமாக விட்டுவிட்டார். அவரிடமிருந்து தப்பிக்க இதுதான் தருணம் என்று எனக்குத் தோன்றியது. உடனே பக்கத்து அறைக்கு ஓடினேன். அறையின் கதவைப் பூட்டிக்கொண்டேன். அங்கிருந்த தொலைபேசியில் என் கணவருக்குத் தகவல் தெரிவித்தேன்.
பின்னர் போலீஸார் அந்த இடத்தைக் கண்டுபிடித்து என்னை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர். இந்த அனுபவம் ஒரு மோசமான திரைப்படம் போன்றது, நான் காணாமல் போனபோது என்னைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. என்னைத் தப்பிக்க வைத்ததற்கு கடவுளுக்கு நன்றி. கை எலும்பு முறிந்தது. தலையில் காயம் தவிர, நான் நன்றாக இருக்கிறேன்".
இவ்வாறு நட்டாலி பிர்லி தெரிவித்துள்ளார்.
