

இஸ்லாமாபாத்,
இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது. முஸ்லிம் வரலாற்றில் இதுபோன்ற கட்டாய மதமாற்றத்துக்கு இடமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:
''பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் மதவிழாக்களை, பண்டிகைகளை எந்தவிதமான இடையூறும் இன்றி கொண்டாடி மகிழவும் அவர்களுக்குள்ள உரிமை பாதுகாக்கப்படும்,
இறைத்தூதர் முகமது நபி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய மத சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்களின் மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்டன. ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்தோ அல்லது வேறு சிறுபான்மையினரைத் திருமணம் செய்தோ, முஸ்லிம் மதத்துக்கு எப்படி நாம் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முடியும். அல்லது துப்பாக்கி முனையில் மிரட்டி மதமாற்றம் செய்ய முடியுமா?
இந்தச் செயல் அனைத்தும் முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது. இறைவுன் அனுப்பிய இறைத்தூதர்களிடம், யார்மீதும் நம்பிக்கைகளை கட்டாயப்படுத்தி திணிக்கக் கூறவில்லை. அதன்படிதான் இறைத்தூதர்கள் நடந்தார்கள். இறைத்தூதர்களின் பணி கடவுளின் வார்த்தைகளைப் பரப்புவது மட்டுமே.
பாகிஸ்தானை மதினாவின் மாதிரியாக மாற்றுவேன். அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடக்கும். அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படும்.
சீக்கிய மக்களின் புனிதத் தலமான பாபா குருநானக் பிறந்த இடத்துக்கு செல்லும் கர்தார்பூர் பாதை விரைவில் திறக்கப்பட உள்ளது. அதற்கான முயற்சியில் என்னுடைய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த 1947-ம் ஆண்டு முகமது அலி ஜின்னா தனது முதல் பேச்சிலே, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்கள் தங்களின் மத சுதந்திரத்தோடு வாழ முடியும், அவர்களின் நம்பிக்கைக்கு எந்தவிதமான பங்கமும் ஏற்படாது என்று தெரிவித்திருந்தார். அதன்படி செயல்படுவோம்’’.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.
சமீபத்தில் சிந்து மாநிலத்தில் இந்துப் பெண்களைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகின. கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் இந்து, கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் செய்து மதமாற்றம் செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமை அறிக்கை சுட்டிக்காட்டியது.
அதிலும் மார்ச் மாதம் ரவீனா(13 வயது), ரீணா(15 வயது) சகோதரிகள் சிந்து மாநிலம், கோத்தி மாவட்டத்தில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து சில ஆதிக்கவாதிகளால் கடத்தப்பட்டு கட்டாயத் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத் தொடர்ந்து சிந்து மாநில சட்டப்பேரவை சமீபத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. அதன்படி, கட்டாயப்படுத்தி சிறுபான்மையினரை மதமாற்றம் செய்வதைத் தடை செய்வது, இந்துப் பெண்களைக் கடத்துவதைத் தடை செய்தல், கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தல் போன்றவை அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தானில் ஏறக்குறைய 75 லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் வாழ்வதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், இந்து மக்கள் சார்பில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
பிடிஐ