

பாகிஸ்தானில் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில், “ராவல்பிண்டி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்திலிருந்த 5 பேர் உட்பட 17 பேர் பலியாகினர்.
12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானம் மோதியதன் காரணமாக அப்பகுதியிலிருந்த சில வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதியில் வசிக்கும் முகமத் சாதிக் கூறும்போது, “பலத்த சத்தம் கேட்டதால் நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன். மக்கள் சத்தமிடத் தொடங்கினர். பின்னர் நாங்கள் விபத்து ஏற்பட்ட பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம்” என்றார்.
பாகிஸ்தானில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனியார் விமானம் ஒன்று இஸ்லமாபாத் அருகில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 150 பயணிகள் பலியாகினர். பாகிஸ்தானில் வரலாற்றில் ஏற்பட்ட மோசமான விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.