அமெரிக்க சிறையில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் இந்தியர்கள்

அமெரிக்க சிறையில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் இந்தியர்கள்
Updated on
1 min read

ஹூஸ்டன்

அமெரிக்க சிறையில் 20 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் மூன்று இந்தியர்களுக்கு குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ஐசிஇ) நீதிபதிகள் உத்தரவின்படி கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. 

டெக்ஸாஸ் மாகாணத்தில் எல் பாசோ என்ற இடத்தில் அமைந்துள்ள குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க சிறையில் புலம் பெயர்ந்த விவகாரத்தில் சட்டத்தை மீறி நடந்த 3 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். காவலில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மூன்று இந்தியர்கள் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 

இதுகுறித்து அவர்களது வழக்கறிஞர் லிண்டோ கோர்ச்காடோ தெரிவித்த விவரம்:

“மூன்றுபேரும் தங்களுக்கு அமெரிக்காவில் புகலிடம் கேட்டு மனு செய்தனர். ஆனால் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு இம்மூவரையும் நாடுகடத்த உத்தரவிட்டனர். 

இந்த உத்தரவிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.  மேலும் தங்கள் வழக்கை ஏற்று தங்களை அமெரிக்காவிலேயே வசிக்க அனுமதி வழங்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து கடந்த ஜூலை 9 முதல் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். 

உண்ணாவிரதம் குறித்து அமெரிக்க நீதித்துறை கடந்த வாரம் அளித்த உத்தரவில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இந்தியக் கைதிகளுக்கு உணவளிக்கும்படியும் மறுத்தால் கட்டாயப்படுத்தி குளுக்கோஸ்  ஏற்றும்படியும் உத்தரவிட்டனர். அதன்படி மூவருக்கும் கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அடுத்தப்படியாக கட்டாயப்படுத்தி உணவளிப்பார்கள் என்று கவலையாக உள்ளது.

குடியேற்ற நீதிமன்றம் தங்கள் வழக்குகளுக்கு ஒருதலைப்பட்சமான மற்றும் பாரபட்சமான நடைமுறைகள் கொண்டிருப்பதாக எனது கட்சிக்காரர்கள் நம்புகிறார்கள். அதனாலேயே தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நீண்டகால தடுப்புக்காவல் உத்தரவை எதிர்த்து அவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். 

அவர்களுக்கு வழங்கப்பட்ட  ஓராண்டு தடுப்புக் காவல் என்பது மிகவும் வேதனைக்குரியது. இதற்காக குடிவரவு அதிகாரிகளின் கவனர்த்தை ஈர்க்கவும் சிறைக் காவலிலிருந்து விடுவிக்கப்படவும் 3 இந்தியர்களுக்கு இதைத் தவிர வேறு வழிகள் இல்லை”.

இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொண்ட இந்தியர்களுக்கான வழக்கறிஞர் தெரிவித்தார்.

புலம்பெயர் குடியேற்றக் கைதிகள் உண்ணாவிரதம்

எல் பாசோ மற்றும் ஓடெரோ மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகிய இடங்களில் உள்ள குடியேற்ற சுங்க அமலாக்க வளாகங்களில் கடந்தவாரம் தடுப்புக் காவல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததை ஐ.சி.இ உறுதிப்படுத்தியது. அதேநேரம் குளுக்கோஸ் அல்லது கட்டாயமாக உணவளிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தோ கருத்து தெரிவிக்கவில்லை. 

அதுபோல நாடு கடத்தப்படும் உத்தரவுகள் வழங்கப்படுவது குறித்தும் இமிகிரேஷன் அன்ட் கஸ்டம்ஸ் என்ஃபோர்ஸ்மெண்ட் (ஐசிஇ) உறுதிப்படுத்தவில்லை.

கோர்ச்சடோ  தெரிவிக்கையில், ''  வேறொரு வழக்கில், ஒட்டெரோவில் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவர் அவரது உண்ணாவிரதத்தின் எட்டாவது நாளில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்” என்றார்.

-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in