

மியான்மரில் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். பலர் இன்னும் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “மியான்மரில் வடகிழக்கு மாகாணமான காசின்னில் உள்ள கயின் சாவுங் கிராமத்திற்கு அருகில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். இதில் 15 பேர் அதில் பணிபுரிந்தவர்கள். 3 பேர் பாதுகாவலர்கள். இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் நீண்ட நேரமாக நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மரில் சுரங்கங்களில் விபத்து ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அங்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஹபகாண்டில் நடந்த சுரங்க விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.