

காபூலில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், ''ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை அடுக்குமாடிக் கட்டிடத்தில் நடத்த தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் நால்வரும் இந்தத் தாக்குதலில் பலியாகினர். தற்கொலைப் படை தாக்குதல் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டிருந்த 15 பேரை பாதுகாப்புப் படைகள் காப்பாற்றின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பரில் ஆப்கான் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தொடர்ந்து அங்கு தீவிரவாதத் தாக்குதல் நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி, தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில் தலிபான்கள் மற்றும் ஆப்கன் அரசு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது.