Published : 29 Jul 2019 11:46 AM
Last Updated : 29 Jul 2019 11:46 AM

போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல்: பழங்குடியினர் 65 பேர் பலி

காஜீராம் (நைஜீரியா)

நைஜீரியாவில் சனிக்கிழமை அன்று இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட பழங்குடியினர் மீது போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் பலியாகினர். 

இதுகுறித்து உள்ளூர் அரசாங்கத் தலைவர் முகமது புலாமா கூறுகையில், ''மைடுகுரி நகரத்திற்கு அருகிலுள்ள பழங்குடியினர் கிராமம் ஒன்றில் நேற்று காலை (ஞாயிற்றுக்கிழமை) 65 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அன்று துப்பாக்கி ஏந்திய போகோ ஹராம் தீவிரவாதிகள் திடீரென்று ஊருக்குள் நுழைந்தனர். அங்கு நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஏராளமான பழங்குடி மக்களை அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் முதலில் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தீவிரவாதிகளை துரத்திச் சென்றபோது 42 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் 11 போகோ ஹராம் தீவிரவாதிகளை உள்ளூர்வாசிகள் கொன்றனர். அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது'' என்றார்.

போகோ ஹராம் போராளிகளின் உள்ளூர் எதிர்ப்புக்குழுத் தலைவர் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார். 

கிராமத்தில் வசித்துவரும் மக்கள் 10 தானியங்கி துப்பாக்கிகளையும் கைப்பற்றினர். நங்கன்சாய் மாவட்டத்தின் சுற்றுவட்டாரங்களில் போகோ ஹராம் தீவிரவாதிகள் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பத்தாண்டுகளில் 27 ஆயிரம் பேர் கொலை

'போகோ ஹராம்' என்றால், 'மேற்கத்திய கல்வியே ஒரு பாவச்செயல்' எனப் பொருளாகும். இந்த அமைப்பு நைஜீரியா முழுமையும் ஷரியத் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று போராடும் ஓர் நைஜீரிய இசுலாமியக் குழுவினர் ஆகும்.

2002-ல் சாதாரணமாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாக போகோ ஹராம் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது. போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 மக்களைக் கொன்றுள்ளனர். இதனால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x