

லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று நடந்த உணவுத் திருவிழாவில் திடீரென மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3பேர் கொல்லப்பட்டனர் 12 பேர் படுகாயமடைந்தனர்.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகரின் தென்கிழக்குப்பகுதியில் ஒரு மலைப்பகுதியில் கார்லிக் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் உணவுத் திருவிழா 1979-ம் ஆண்டில் இருந்து பாரம்பரியமாக நடந்து வருகிறது.
3 நாட்கள் நடத்தப்படும் இந்த திருவிழாவில் உணவு சமைத்தல் போட்டி, உணவுக்கூடங்கள், கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை நிறைந்திருக்கும். இந்த திருவிழாவுக்கு வரும் மக்கள் யாரும் எந்தவிதமான ஆயுதங்களும் எடுத்துவர தடை செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், உணவுத்திருவிழாவில் நேற்று வழக்கம் போல் மக்கள் உணவுக்கூடங்களில் உணவு சாப்பிட்டும், பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டும் இருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதால், மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறி்த்து என்பிசி செய்தி கூறுகையில், " சான்ஜோஸ் கார்லிக் உணவுத் திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தபட்சம் 5 பேர் கொல்லப்பட்டனர், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது 3 பேர் உயிரிழந்தனர் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த எந்த விவரம் தெரியவில்லை. ஆனால், 30வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் துப்பாக்கியுடன் இருந்ததாக உணவுத்திருவிழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் சான் ஜோஸ் நகரில் உள்ள சான்டா கிளாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் 11 பேரின் உடல்கள் கிடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் பார்த்த மேக்ஸிமோ ரோச்சா என்பவர் கூறுகையில், " திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் அனைவரும் சிதறி ஓடினார்கள், அப்போது தரையில் ஏராளமான மக்கள் விழுந்து கிடந்தார்கள். ஆனால், எத்தனைபேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள் என எனக்குத் தெரியாது. பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினார்கள்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சான் ஜோஸ் நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த அடையாளத்தை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிஐ