

ஆப்பிரிக்கக் கண்டத்தில் சீனாவின் செல்வாக்கு குறித்த கவலைகளினால் அமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது ஆப்பிரிக்கா பக்கம் தன் கவனத்தைத் திருப்பியுள்ளார் என்று சீன அரசு ஊடகம் விமர்சித்துள்ளது.
தி குளோபல் டைம்ஸ் என்ற நாளிதழில் கூறியிருப்பதாவது, "ஆப்பிரிக்காவில் சீனாவின் செல்வாக்கை புறந்தள்ளிவிட்டு அமெரிக்க கடந்த கால செல்வாக்கை வலிந்து புகுத்தும் முயற்சியே ஒபாமாவின் ஆப்பிரிக்க பயணம்.
ஆப்பிரிக்காவில் சீனாவை ஒரு எதிரியாக எடுத்துக் கொள்கிறது அமெரிக்கா. சீனாவின் சீரான, நியாயமான ஆப்பிரிக்க செயல்பாடுகளுக்கு மாறாக சீரான ஆப்பிரிக்க கொள்கை அமெரிக்காவிடத்தில் இல்லை” என்று கூறியுள்ளது.
அதிகாரபூர்வ சீன செய்தி நிறுவனமான சினுவா, ஆப்பிரிக்க நாடுகளுக்கான அமெரிக்க நிதியுதவிகள் பயனற்றது என்று கூறி மாறாக சீனாவின் ஆப்பிரிக்க சாலைகள், அணைக்கட்டுகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை விதந்தோதியுள்ளது.
"அமெரிக்காவின் கடமை உணர்வு பெருமளவு கேள்விக்குட்பட்ட ஒரு கண்டத்தில் (ஆப்பிரிக்கா) ஒபாமா இன்னும் கூட கடுமையாக உழைக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கியுள்ளது சினுவா.
ஆப்பிரிக்க நாடுகளின் சீனாவின் வர்த்தகச் செல்வாக்கு கடுமையாக சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இருதரப்பு வர்த்தகம் 2013-ல் 200 பில்லியன் டாலர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து சீனா எண்ணெய், தாமிரம் மற்றும் பிறபொருட்களை இறக்குமதி செய்துள்ளது இதில் அதிக பங்களிப்பு செய்துள்ளது.
மாறாக ஆப்பிரிக்காவுடனான அமெரிக்க வர்த்தகம் 2013-ல் வெறும் 85 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்கிறது புள்ளிவிவரங்கள்.