

இஸ்லாமாபாத்,
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் பிடிவாதத்தினால் அதிகமான விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அமெரிக்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டார். அப்போது, இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், " ஜப்பானில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடியிடம் பேசினேன்.
அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி என்னிடம் கோரிக்கை விடுத்தார். இரு நாடுகளும் விரும்பி கேட்டுக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமாக இருக்கிறேன் " எனத் தெரிவித்தார்.
ஆனால், அதிபர் டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அறிக்கை வெளியிட்டது. அதில் , "பிரதமர் மோடி, ஒருபோதும் காஷ்மீர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப்பை மத்தியஸ்தம் செய்யக் கேட்கவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சின் மூலமே தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பேச்சுக்கு இடமில்லை" எனத் தெரிவித்தது.
ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் தேவை என்று பிரதமர் இம்ரான் கானும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த சூழலில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், " காஷ்மீர் மிகவும் பதற்றமான விவகாரம் என்பதை அமெரிக்க உணர்ந்திருக்கிறது, இதற்கு இதற்கு் முன்பே தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அதிபர் ட்ரம்ப், பிரதமர் இம்ரான் கானிடம் பேசியது, பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகளைக் காட்டிலும் அதிகமாகும்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் பிடிவாதப் போக்கிற்கு அதிகமாக விலை கொடுக்க வேண்டியது இருக்கும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சூழல் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார், இந்தியாவுடன் நாங்கள் அமைதியை விரும்புவதை இந்த ஆசியப் பிராந்தியமே விரும்புகிறது " எனத் தெரிவித்தார்.
.பிடிஐ