

பிரேசில் நாட்டின் சாவ் பவ்லோ சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 25-ம் தேதி ஒரு எஸ்யுவி காரும் சிறிய ரக லாரியும் வந்துள் ளன. பார்ப்பதற்கு போலீஸ் வாகனங்கள் போல இருந்த அவற்றில் போலீஸ் சீருடை அணிந்த 8 பேர் வந்துள்ளனர்.
விமானத்தில் வந்துள்ள சரக்கை எடுத்துச் செல்ல வந்திருப்ப தாக அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பிய விமான நிலைய சரக்கு முனைய ஊழியர்கள், சரக்குப் பெட்டியை அந்த போலீஸ் வாக னத்தில் ஏற்றி உள்ளனர். பின்னர் அந்த வாகனம் பறந்துவிட்டது. இவையெல்லாம் வெறும் 3 நிமிடங்களில் நடந்துவிட்டன. இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகி உள்ளன.
ஆனால் அவர்கள் சென்ற பிறகுதான், சரக்கு பெட்டகத்தில் சுமார் 207 கோடி மதிப்பிலான 680 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. ஜுரிச் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய அந்த தங்கத்தை, மர்ம நபர்கள் போலீஸார் போல ஏமாற்றி கொள்ளை அடித்துச் சென்றதும் தெரியவந்தது. திட்டமிட்டு இந்த கொள்ளை நடந்திருப்பதாகவும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரேசில் வரலாற்றில் இது 2-வது மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் ஆகும். கடந்த 2005-ம் ஆண்டு அந்நாட்டு மத்திய வங்கியில் துளையிட்டு ரூ.462 கோடி மதிப்பிலான அந்நாட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பிரேசிலில் ஏடிஎம் திருட்டு, சரக்கு லாரிகளை கடத்துவது உட்பட பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.