Published : 28 Jul 2019 09:38 AM
Last Updated : 28 Jul 2019 09:38 AM

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு ‘பிரிக்ஸ்’ அமைப்பு வேண்டுகோள்

பிடிஐ

தங்கள் பகுதியிலிருந்து தீவிர வாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சாலை போக்குவரத்து மற்று நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் உட்பட உலகில் சமீபத்தில் நடை பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களுக்கு இந்தக் கூட்டத் தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாத செயல்களை நியாயப் படுத்த முடியாது என்றும் இதை எந்த ஒரு மதம், நாடு மற்றும் இனத்துடன் தொடர்புப் படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், ஐ.நா. ஆதரவுடன் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட கூட்டாக இணைந்து செயல்படுவது என முடிவு செய்துள்ளோம். உலக நாடுகளும் தீவிரவாதத்தை ஒடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக, மத அடிப்படைவாதத்தைப் பரப்புதல், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல் உள்ளிட்ட செயல்கள் தங்கள் மண்ணிலிருந்து நடைபெறாமல் தடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைக்கும் ஆதாரம் மற்றும் வழிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்க வேண்டும்.

தங்கள் மண்ணில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவது தெரியவந்தால் அதை அழிக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையதளத்தை தீவிரவாதிகள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக் கவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x