Published : 27 Jul 2019 10:48 AM
Last Updated : 27 Jul 2019 10:48 AM

ட்ரம்ப் - இம்ரான் கான் சந்திப்பு எதிரொலி: பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானம் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்பட உள்ள எஃப் -16 ரக போர் விமானம் : கோப்புப்படம்

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்துவிட்டு வந்த  சில நாட்களிலேயே பாகிஸ்தானுக்கு 12.50 கோடி டாலர் மதிப்பிலான அதிநவீன எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தகைய போர் விமானங்கள் தீவிரவாத ஒழிப்புக்கும், கண்காணிப்புக்கும் பயன்படுத்த விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவான, பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை நிறுத்திவைப்பது என்பது இன்னும் அமலில் இருக்கிறது. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் ட்ரம்ப் அறிவித்தபடி பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகள் நிறுத்தப்பட்டுள்ள முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. அதேசமயம், இரு தரப்பு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், சில பாதுகாப்பு திட்டங்களுக்கு உதவலாம் என்று இந்த வாரத்தில் அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். 

அதன்படிதான் தீவிரவாத ஒழிப்பு, எல்லை ஓரக் கண்காணிப்பு ஆகியவற்றுக்காக பாகிஸ்தானுக்கு 12.50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான சேவைகளை, ஆலோசனைகளை வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததால் இந்த உதவி வழங்கப்பட்டது. அதன்படி, அமெரிக்க அரசு, தொழில்நுட்ப சேவை, போக்குவரத்து தொடர்பான சேவை ஆகியவற்றை பாகிஸ்தானுக்கு வழங்குகிறது" எனத் தெரிவித்தார். 

ஆனால், அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவுக்கு எதிராகத்தான் பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்களை தீவிரவாத ஒழிப்புக்கும், கண்காணிப்புக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தபோதிலும், பாகிஸ்தான் ராணுவம் பாலகோட் தாக்குதலின்போது பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்பட உள்ள எஃப்-16 ரக போர்விமானங்கள், பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளின் ராணுவ பலத்தை சமன் செய்வதற்காக விற்கப்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x