

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இஸ்லாமாபாத் திரும்பினார், விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ‘உலகக்கோப்பையை வென்றது போல் உள்ளது’ என்றார்.
வாஷிங்டனுடன் ஏற்பட்ட முறிந்த உறவுகளை மீட்க இம்ரான் அமெரிக்கா சென்றார், அங்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோரை சந்தித்தார்.
இன்று அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவு தினமும் கொண்டாடப்படுவதால் விமான நிலையத்தில் அவர் கட்சித் தொண்டர்கள் இம்ரான் கானை வாழ்த்தி கோஷமிட்டனர்.
பிறகு பேசிய அவர், “உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதாவது அதிகாரபூர்வ அரசியல் பயணம் போல் இல்லை, உலகக்கோப்பை வென்று நாடு திரும்புவது போல் உள்ளது.
பாகிஸ்தானைக் கொள்ளை அடித்த திருடர்கள் சீரழித்த நிறுவனங்கள் அனைத்தையும் நாம் உருமாற்றம் செய்ய வேண்டும். பாகிஸ்தானிலிருந்து வளங்களைக் கொள்ளை அடித்து அயல்நாட்டில் பதுக்கியுள்ள திருடர்கள், கயவர்களிடமிருந்து நாட்டை மீட்டு உருவாக்க மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
யார் முன்னாலும் தலைகுனிந்து நாட்டுக்கு தலைகுனிவு ஏற்படுத்த மாட்டேன். உலகம் முழுதும் பாகிஸ்தானின் பச்சை பாஸ்போர்ட்டை மதிக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. உலகின் சிறந்த நாடாக பாகிஸ்தான் எழுச்சியுறும்” என்றார் இம்ரான் கான்.
ஆனால் அயல்நாடுகளில் தங்களை கேவலப்படுத்திப் பேசியதாக எதிர்க்கட்சிகள் இம்ரான் கானை விமர்சித்து நாடு முழுதும் போராட்டங்களை நடத்தினர். 2018 தேர்தலில் மோசடி நடந்தது என்று குற்றம்சாட்டவும் செய்தனர்.
-பிடிஐ.