

சியோல்:
குறுகிய தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகளை கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏவி வடகொரியா இன்று பரிசோதனை செய்தது.
அமெரிக்கா, வடகொரியா இடையே அணு ஆயுத ஒப்புந்தம் தொடர்பாக பேச்சு நடக்க இருந்த நிலையில் திடீரென வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து யான்ஹப் செய்தி நிறுவனத்துக்கு ராணுவ அலுவலகத்தின் இணை அதிகாரி அளித்த பேட்டியில், " இன்று காலை 5.34 மணிக்கும், 5.57 மணிக்கும் குறுகிய தொலைவு செல்லக்கூடிய இரு சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கிழக்கு கடற்கரைப் பகுதியான வோன்சான் பகுதியில் இருந்து வடகொரியா பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணைகளில் ஒன்ரு 430 கி.மீ தொலைவு சென்று தாக்கும் திறன் படைத்தது, மற்றொன்று 690 கி.மீ சென்று தாக்கும் தன்மை கொண்டது. இரு ஏவுகணைகளும் 50 கி.மீ அட்சரேகையில் பாயும்தன்மை கொண்டது.
இந்த இரு ஏவுகணைகளும் குறுகிய தொலைவு செல்லும் திறன்படைத்தது என்றாலும், ஏராளமான புதிய அம்சங்களை ஏவுகணைகளில் சேர்த்துள்ளோம். இதற்காக அதிகமான காலம் ஆய்வுகளும், பரிசோதனைகளும் நடந்தன " எனத் தெரிவித்தார்.
தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக இணைந்து கொரிய கடற்பகுதியில் ராணுவ ஒத்திகை நடத்தி வருவதால் எரிச்சல் அடைந்த வட கொரியா இந்த சோதனையை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் " வடகொரியா இதுபோன்ற ஏவுகணைச் சோதனைகளை நிறுத்தாவிட்டால், கொரிய தீபகற்பத்தில் நிச்சயம் ராணுவ பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளுக்கு பலன் அளிக்காது. அமெரிக்காவுடன் நடக்கும் பேச்சிலும் பின்னடைவை ஏற்படுத்தும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
-ஐஏஎன்எஸ்