

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் அரசுப் படைகள் மற்றும் ரஷ்ய படைகள் மீண்டும் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரியாவில் இயங்கும் மனித உரிமை ஆணையம் தரப்பில் , “ இட்லிப் மாகாணத்தில் கான் ஷெக் குன் நகருக்கு அருகில் ரஷ்யப் படைகள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 20 பேர் பலியாகினர். இதில் பலர் குழந்தைகள். மேலும் இட்லிப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரம் மாதம்முதல், கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள கடைசி பகுதியான இட்லிப் மாகாணத்தை மீட்க சிரிய அரசுப் படைகள் கடுமையான தாக்குதலை அங்கு நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் திங்கட்கிழமை சிரியா மற்றும் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 50-ஐத் தாண்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
உடனடியாக சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்தது. இந்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரிய போர்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஆசாத் அமைப்புக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.
இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இதில் சிரியாவின் வடகிழக்குப் பகுதியான இட்லிப் மாகாணம் மட்டும் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது. இதனை மீட்க அரசுப் படைகள் ரஷ்யாவுடன் இணைந்து கடுமையாகப் போரிட்டு வருகின்றன.