

பெண்டகனின் தேசிய ராணுவ உத்தி அறிக்கையில் தெற்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் சீரற்றதாகவும், பன்னாட்டு சட்டத்திற்குப் புறம்பாக உள்ளதாகவும் தெரிவித்ததையடுத்து அமெரிக்கா மீது சீனா கடும் கோபமடைந்துள்ளது.
தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்துள்ளதாகவும், செயற்கைத் தீவுகளை உருவாக்கிக் கொண்டே செல்வதாகவும், பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளின் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாகவும் சமீப காலங்களாக சீனா மீது அமெரிக்காவும், பிற நாடுகளும் அதிருப்தி வெளியிட்டு வந்தன.
சீனாவின் இத்தகைய ஆதிக்கப் போக்குகள் ஆசிய-பசிபிக் பகுதியில் பதட்டத்தை அதிகப்படுத்துகிறது என்று அமெரிக்க ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, “ஆதாரமற்ற ஊதிப்பெருக்கப்பட்ட தரவுகளை அமெரிக்கா திட்டமிட்டு பரப்பி வருகிறது.
நாங்கள் ஏற்கெனவே இது குறித்த எங்களது அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளோம். அமெரிக்க அறிவுக்குப் புறம்பான ஊதிப்பெருக்கப்பட்ட தரவுகளை உருவாக்கி அளித்து வருகிறது.
தெற்கு சீன கடல் பகுதியில் எங்களது தீவு உருவாக்கங்கள் குறித்து பலமுறை விளக்கிவிட்டோம்.
அமெரிக்கா தனது பனிப்போர் மனப்பான்மையைக் கைவிட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்றார்.
தெற்கு சீன கடலின் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு ஆற்றல்கள் உள்ள பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருகிறது. இப்பகுதி வழியாக ஆண்டுக்கு 5 லட்சம் கோடி அளவுக்கு கப்பல் போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.