ஹபீஸ் சயீத் கைது வெறும் கண்துடைப்புதான்: இங்கிலாந்துக்கான முன்னாள் பாக். தூதர் வெளிப்படை

ஹபீஸ் சயீத் : கோப்புப்படம்
ஹபீஸ் சயீத் : கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி

ஐ.நா.வால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு கைது செய்திருப்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே என்று இங்கிலாந்துக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் வஜித் ஷாமுல் ஹசன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முன் அதிபர் ட்ரம்ப்பை சமாதானம் செய்யும் நோக்கிலும், அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் நோக்கிலும் இந்தக் கைது நாடகம் நடந்திருக்கிறது என்று ஷாமுல் ஹசன் தெரிவித்துள்ளார்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், ஜமாத் உத் தவா அமைப்பின்  தலைவருமான ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 167 அப்பாவி மக்கள் பலியான வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஐ.நா. சபையில் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சமீபத்தில் ஹபீஸ் சயீத் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த வாரம் பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத்தை தீவிரவாதி அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது. 

இந்தக் கைது சம்பவங்களுக்குப்பின் 3 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்றுள்ளார்.  ஹபீஸ் சயீத் கைது குறித்து இங்கிலாந்துக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் வஜித் ஷாமுல் ஹசன் சுர்கியான் எனும் புலனாய்வு இதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: 

“ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் இதோடு 9-வது முறையாக கைது செய்து இருக்கிறது. ஹபீஸ் சயீத்தின் கைது முழுமையாக கண்துடைப்பு நடவடிக்கை என்பது பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முன், அமெரிக்க அரசையும், அதிபர் ட்ரம்ப்பையும் சமாதானம் செய்யும் நோக்கிலும், அமைதிப்படுத்தவும் இந்தக் கைது நாடகம் அரங்கேறி இருக்கிறது.

ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டது அமெரிக்காவின் நடவடிக்கைக்கு மிகப்பெரிய வெற்றி என்றாலும், இதுவரை அதிபர் ட்ரம்ப் தரப்பில் இருந்து எந்தவிதமான ட்வீட்டும் வெளியிட்டப்படவில்லை. அமெரிக்காவிடம் பல்வேறு உதவிகளைக் கோருவதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செல்லும் நேரத்தில் ஹபீஸ் சயீத் கைது நடந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஹபீஸ் சயீத் கைது என்பது பிரதமர் இம்ரான் கானின் புதிய ராஜதந்திர யுத்திகளில் ஒன்றாகும். தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து எடுத்து வருகிறது என வெளிப்படுத்தி, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் தன்னுடைய பேரம் பேசும் திறனை வளர்த்துக்கொள்ளும் உத்தியாகும்.

ஹபீஸ் சயீத் தான் கைது செய்யப்படுவதற்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஆதரவாளர்களிடம், தான் ஏன் கைது செய்யப்படப் போகிறேன்? என்பதற்கான காரணங்களையும் விளக்கிக் கூறியுள்ளார். அப்போது அமெரிக்காவின் நெருக்கடி காரணமாகவே பாகிஸ்தான் அரசு வேறு வழியின்றித் தன்னை கைது செய்ய இருக்கிறது. இந்தக் கைது நடவடிக்கை, பரபரப்பு போன்றவை சில காலம்வரைதான் இருக்கும், யாரும் கவலைப்படத் தேவையில்லை. நாம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் நம்முடைய வழக்கமான பணிகள் தொடங்கும். அதுவரை பொறுமை காக்கவும்” எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். 

ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in