

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எவ்வளவோ தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தது பாகிஸ்தான். ஆனால் அது நினைத்தது நடக்கவில்லை. இந்திய உளவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்ட ரீதியாகவும் ராஜீய ரீதியாகவும் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்திக்கும் நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தியா கேட்ட அத்தனை கோரிக்கைகளையும் சர்வதேச நீதிமன்றம் ஏற்கவில்லை என்றாலும், இந்தியாவுக்கு ஆதரவாக 14 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்துள்ளனர். வியன்னா ஒப்பந்தத்தின்படி கைதியாக பிடிக்கப்பட்ட ஜாதவின் உரிமைகள் குறித்து அவருக்கு தெரிவிக்கவில்லை என்பதும் தூதரக தொடர்பை அளிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இப்படி வியன்னா ஒப்பந்தத்தை மீறியதால், குல்பூஷண் ஜாதவின் வழக்கு விசாரணை எத்தனை தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தும்படியும் சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. விசாரணை தொடங்குவதற்கு முன்னரே, ஜாதவ் ஒரு உளவாளி என்பதால், அவர் வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் வர மாட்டார் என்ற பாகிஸ்தானின் வாதம் எடுபடவில்லை. ஜாதவ் மீதான பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற விசாரணை விதிமீறல் என அறிவிக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜாதவை இந்தியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இந்தியா கோரியுள்ளது.
இந்திய கடற்படையில் பணியாற்றிய ஜாதவ், பலூசிஸ்தான் பகுதியில் இந்தியாவின் ரா உளவு அமைப்பின் உளவாளியாக வேலை பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படையில் இருந்த ஜாதவ், ஓய்வு பெற்றுவிட்டார் எனவும் ஈரானில் இருந்த அவரை பாகிஸ்தானுக்கு கடத்திச் சென்று பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் இந்தியா கூறி வருகிறது. ஜாதவை உளவாளியாக இந்தியா ஒப்புக் கொண்டால், அவரை விடுதலை செய்யத் தயார் என கடந்த ஆண்டு பாகிஸ்தான் அறிவித்தது. ஆனால் இது ஏமாற்றுவேலை என்பதை அறிந்த, இந்தியா அதை ஏற்கவில்லை. இந்தியா மட்டும் உளவாளி என்பதை ஏற்றுக் கொண்டிருந்தால், சர்வதேச அளவில் பாகிஸ்தான் அதை பிரச்சாரம் செய்து ஆதரவு தேடும் என்பது இந்தியாவுக்குத் தெரியாதா என்ன?
கடந்த2008-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீது கைது செய்யப்பட்டிருக்கிறார். முக்கிய தீவிரவாதிகள் மீதும் அவர்களின் தீவிரவாத தொடர்புகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் வலியுறுத்தல் காரணமாகவே பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் இப்படி கைது செய்வதும் பிறகு விடுதலை செய்வதும் பாகிஸ்தான் நடத்தும் நாடகம் என்பது அனைவருக்குமே தெரியும். கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து இதுவரை அவர் 8 முறை கைது செய்யப்பட்டு. விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியாவுடன் நல்ல உறவை கடைப்பிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால், முதலில் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும். ஆனால், சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், தன் நாட்டு சட்டப்படிதான் ஜாதவ் வழக்கில் நடந்து கொள்வோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. ராணுவத்தை பகைத்துக் கொண்டு, இந்த வழக்கை ராணுவ நீதிமன்றத்தில் இருந்து, மக்கள் நீதிமன்றத்துக்கு இம்ரான்கான் மாற்றுவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. ஒரு விஷயத்தை இம்ரான் கான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராகவும் உலக நாடுகளுக்கு எதிராகவும் உள்ள தீவிரவாதத்தை ஒடுக்க கான் நடவடிக்கை எடுத்தால், பாகிஸ்தான் மீது நல்லெண்ணம் உருவாக வாய்ப்புள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு நாட்டை, ஜனநாயகப் பாதைக்கும் கொண்டு வர முடியும். ஜாதவ் பிரச்சினையை அவர் எப்படி கையாளப் போகிறார் என்பது அவருக்கான முதல் சோதனை.
- டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்