

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் (பழமைவாதக் கட்சி) தலைவர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட்டை தோற்கடித்ததைத் தொடர்ந்து ஜான்சன் பிரதமராகத் தேர்வாகியுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், மொத்தமுள்ள 1,59,320 உறுப்பினர்களில் 92,143 பேர் போரிஸ் ஜான்சனுக்கு வாக்களித்தனர். இதில் ஜெர்மி ஹண்ட்டுக்கு 46,656 வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் ஜான்சன் பெற்ற வாக்கு சதவீதம் 66.4% . ஜெர்மி ஹண்ட் பெற்ற வாக்கு சதவீதம் 33.6% .
இதனைத் தொடர்ந்து இந்தவாரம் போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவி ஏற்பார் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்த விவகாரத்தை 'பிரெக்ஸிட்' என்று அழைத்து வந்தனர். ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை தோல்வி கண்டது.
ஆளும் பழமைவாதக் கட்சி உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெரசா மே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை ஜூன் மாதம் 7-ம் தேதி ராஜினாமா செய்வதாக தெரசா மே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.