

நீங்கள் ஊடகங்களால் என்னை விட மோசமாக நடத்தப்பட்டிருக்க மாட்டீர்கள் என்று இம்ரான் கானுடான சந்திப்பின்போது அமெரிக்க ஊடகங்களை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றார். பாகிஸ்தான் பிரதமரான பிறகு இம்ரான் கான் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
இந்தச் சந்திப்பில் தீவிரவாத ஒழிப்பு, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை இரு நாட்டுத் தலைவர்கள் ஆலோசித்தனர். இதில் இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது இம்ரான் கான் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் அச்சுறுத்தலில் உள்ளதா ? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இம்ரான் கான் பதிலளிக்கும்போது, “எனது ஆட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாகவே செயல்படுகின்றன. எந்த அச்சுறுத்தலும் இல்லை. நான் எனது சொந்த பத்திரிகையிலிருந்தே விமர்சனத்தைப் பெற்று இருக்கிறேன்” என்றார். அப்போது இடைமறித்த ட்ரம்ப் நீங்கள் என்னைவிட ஊடகங்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டிருக்க மாட்டீர்கள் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து அந்த அறையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.
முன்னதாக, பாகிஸ்தானின் எதிர்க் கட்சிகள் இம்ரான் கான் பாகிஸ்தானின் எதிர்க் கட்சித் தலைவர்களின் நிகழ்ச்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பப் தடை விதித்துள்ளார் என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.