Published : 23 Jul 2019 02:55 PM
Last Updated : 23 Jul 2019 02:55 PM

ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை சிஐஏவுக்குச் சொன்னது யார்? இம்ரான் கான் புதிய தகவல்

பாகிஸ்தானில் மே 2, 2011-ல் அபோட்டாபாதில் அல்கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்க உளவுத்துறை சிஐஏ கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் உதவியே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு முதல் முறையாக பிரதமராக பயணம் மேற்கொண்ட இம்ரான் கான் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் சேனல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்குப் பிடித்தமான சேனல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக பாகிஸ்தான் ஒசாமா இருப்பிடம் சம்பந்தமாக தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே மறுத்து வந்த நிலையில் ஐஎஸ்ஐயின் மூலம்தான் சிஐஏ ஒசாமா பின் லேடனின் இருப்பித்தைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று இம்ரான் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

“இண்டெர் சர்விசஸ் இண்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) உளவு அமைப்புதான் ஒசாமா பின் லேட்ன இருப்பிடம் பற்றிய தகவலை அளித்தது. சிஐஏவிடம் கேட்டீர்களென்றால் அவர் இருந்த இடத்தை தொலைபேசி இணைப்பு மூலம் தகவல் அளித்தது ஐ.எஸ்.ஐ. அமைப்புதான் என்று கூறுவார்கள்” என்றார்.

மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட டாக்டர் அஃப்ரீடியை விடுதலை செய்வதை விரும்புகிறார் என்ற கேள்விக்கு இம்ரான் கூறும்போது, “பாகிஸ்தானில் நாங்கள் அமெரிக்காவின் கூட்டணி நாடு என்று உணர்கிறோம், நாங்கள் ஒசாமா பற்றிய தகவலை அளித்திருந்தால் அவரை நாங்கள் விடுவித்திருப்போம். ஆனால் அஃபீரிடியை விடுதலை செய்வது ஒரு உணர்வுபூர்வமான விஷயம். ஏனெனில் பாகிஸ்தான் அவரை அமெரிக்க உளவாளியாகவே கருதுகிறது

ஆகவே அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை தொடுத்துள்ள வேளையில், ரெய்டில் ஒசாமாவை கொன்றது பாகிஸ்தானை பெரிய அளவில் சங்கடத்தில் ஆழ்த்தியது

நாங்கள் அமெரிக்காவின் நட்பு நாடு ஆனால் அமெரிக்கா எங்களை நம்பவவில்லை, எங்கள் பகுதியில் புகுந்து குண்டு போட்டு ஒரு மனிதரை கொன்றனர்” என்றார் இம்ரான். 

நேர்காணல் செய்தவர், ஒசாமா பின்லேடன் மனிதர் மட்டுமல்ல, 3000 அமெரிக்கர்களைக் கொன்ற ஒரு பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டிய போது இம்ரான் கான், “அமெரிக்காவுக்காக நாங்கள் இந்தப் போரை நடத்துகிறோம், இதில் நிறைய பேரை நாங்களும் இழந்துள்ளோம். எனவே இந்த விஷயத்தில் ஏகப்பட்ட கோபதாபங்கள் இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் கடந்த காலம்தான்” என்றார்.

பிறகு நேர்காணல் கண்டவர், “நீங்கள்தான் பிரதமர், நீங்கள் அப்ரீடி விடுதலை தொடர்பாக முடிவெடுக்கலாமே?” என்றார். இதற்கு இம்ரான் கான், “சில முடிவுகள் ஜனநாயகமாக இருந்தாலும் ஒரு பிரதமர் அதை எடுப்பது கடினமே, ஏனெனில் எங்களுக்கும் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் பேச்சுவார்த்தையில் இதற்குத் தீர்வு காண முடியும். 

2010-ல் எஃப்.பி.ஐ. ஏஜெண்டுகள் மற்றும் ராணுவ வீரர்க்ளைக் கொன்றதாக அமெரிக்காவில் 86 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானிய நியூரோ விஞ்ஞானி ஆஃபியா சித்திக்கியை விடுதலை செய்தால் அப்ரீடியையும் விடுதலை செய்யலாம் என்று கூறிய இம்ரான் கான் ஆனால் இவற்றையெல்லாம் ட்ரம்பைச் சந்தித்தப் போது பேசவில்லை என்றும் தெரிவித்தார். 

“எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை மூலம் இவையெல்லாம் நடைபெறலாம், ஆனால் இப்போதைக்கு அதை நாங்கள் பேசவில்லை” என்றார் இம்ரான் கான்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x