Published : 23 Jul 2019 09:44 AM
Last Updated : 23 Jul 2019 09:44 AM

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: பிரதமர் மோடி உதவி கேட்டார் எனும் ட்ரம்ப் பேச்சுக்கு இந்தியா மறுப்பு

அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி : கோப்புப்படம்

 

வாஷிங்டன், பிடிஐ

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க பிரதமர் மோடி உதவி கேட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று பிரதமர் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் ஆப்கானிஸ்தான் விவகாரம், பலுசிஸ்தான் விவகாரம் ஆகியவற்றோடு காஷ்மீர் விவகாரத்தையும் பேசியுள்ளனர்.

 

இந்தச் சந்திப்புக்குப் பின் அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் இம்ரான் கானும் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் நீங்கள் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அதிபர் ட்ரம்ப் பேசுகையில், "நிச்சயமாக நான் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையில் என்னால் உதவ முடியும். இரு நாடுகளும் விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில்  மத்தியஸ்தம் செய்யும் நபராக இருக்க விரும்புகிறேன்.

 

சமீபத்தில் ஜப்பானில் ஒசாகாவில் நடந்த ஜி-20 மாநாட்டின்போது, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் நபராகச் செயல்படமுடியுமா என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்.

 

காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே காலம் காலமாக இருந்து வருகிறது. எனக்கு இது வியப்பாக இருக்கிறது. இப்படியே எத்தனை ஆண்டுகளுக்கு முடியாமல் இருக்கப்போகிறது.

 

காஷ்மீர் விவகாரம் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்தியர்கள் விரும்புகிறார்கள். இம்ரான் கானும் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறார். இரு நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொண்டால் நான் தயாராக, விருப்பமாக இருக்கிறேன் " எனத் தெரிவித்தார்.

 

ஆனால், காஷ்மீர் விவகாரத்தில்  மத்தியஸ்தம் செய்யக் கூறுமாறு பிரமதர் மோடி கேட்டுக்கொண்டதாக அதிபர் ட்ரம்ப் கூறியதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

 

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், " இந்தியா, பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒருபோதும் அதிபர் ட்ரம்ப்பிடம் அதுபோன்ற கோரிக்கையை வைக்கவில்லை.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களையும் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே மத்திய அரசு விரும்புகிறது. பாகிஸ்தானுடன் எந்தவிதமான பேச்சும், அந்த நாடு எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்திய பின்புதான் நடக்கும் " எனத் தெரிவித்தார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x