Published : 22 Jul 2019 01:13 PM
Last Updated : 22 Jul 2019 01:13 PM

‘‘உள்ளூரில் வரி வசூலித்து நிதி திரட்டுங்கள்’’- கடன் கேட்டுச் சென்ற இம்ரான் கானுக்கு ஐஎம்எப் அறிவுரை

வாஷிங்டன்

பாகிஸ்தான் தங்கள் சொந்த நாட்டில் வரி வசூலித்து நிதி ஆதாரங்களை திரட்ட முயற்சி செய்ய வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதாரம் அதளபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வப்போதைய செலவுக்கு கூட கடன் வாங்கும் சூழலில் உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக பதவிஏற்றவுடன் இம்ரான் கான் ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இருந்த ஏராளமான சொகுசு கார்களை ஏலம் விட்டார், வீடுகளை ஏலம் விட்டார், அதிகாரிகளுக்கு சலுகைகளை குறைத்தார்.

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உள்ள இம்ரான் கான் சிக்கன நடவடிக்கையாக தனி விமானத்தை தவிர்த்து பயணிகள் விமானத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றார்.

அங்கு அவரை வரவேற்கஅமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை. அமெரிக்காவில் நட்சத்திர ஓட்டலில் தங்காமல் பாகிஸ்தான் தூதரின் இல்லத்தில் இம்ரான் கான் தங்கியுள்ளார். அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார்.

வாஷிங்டனில் இன்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதிய அதிகாரிகளை அவர் சந்தித்து பேசினார். ஐஎம்எப் செயல் நிர்வாக இயக்குனர் டேவிட் லிப்ஸனை அவர் சந்தித்து பேசினார்.

இதுகுறித்து லிப்ஸன்  கூறியதாவது:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசியபோது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அப்போது சொந்த நாட்டில் வரி வசூலிப்பதன் மூலம் நிதி ஆதாரங்களை பெருக்குவதில் கவனம் செலுத்தமாறு அவருக்கு நாங்கள் ஆலோசனை கூறியுள்ளோம்.

பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி என்பது நீடிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்கும், சமூகநல மேம்பாட்டுக்கும் செலவு செய்யும் அதே நேரத்தில் கடன் அளவை குறைப்பதையும் பாகிஸ்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x