ஹாங்காங்கில் போராட்டக்காரர்களை தாக்கிய முகமூடி கும்பல்

ஹாங்காங்கில் போராட்டக்காரர்களை தாக்கிய முகமூடி கும்பல்
Updated on
2 min read

ஹாங்காங்கில் போராட்டக்காரர்களை மீது  வெள்ளை நிற டி சர்ட் மற்றும் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஹாங்காங்கில் யுவான் லாங் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்களை நோக்கி வெள்ளை நிற டி சர்ட் அணிந்த முகமூடி  கும்பல் ஒன்று கையிலிருந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.  இதில் போராட்டகாரர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் கடும் காயம் அடைந்தனர். ஒருவரது  நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளனர். 

போராட்டக்காரர்களை தாக்கியவர்கள் யார் எந்த தகவல் இதுவரை தெரியவில்லை என்றும் அவர்கள் பயணிகளையும் போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பியவர்களை தாக்கினர்  என்று போராட்டத்தில் கலந்துக் கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர். 

 மேலும் ஏன் போலீஸார் விரைந்து வந்து  அந்த கும்பல் நடத்திய தாக்குதலை தடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். 

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில்  பேரணி நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி களைத்தனர். இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் வெள்ளை டீ சர்ட் அணிந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த நிலையில் போராட்டக்காரர்களை போலீஸார் தாக்கும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் ஹாங்காங் மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் நாதன் லா, ஜோஷ்வா வாங் போன்ற இளம் போராட்ட தலைவர்களை இதனை வன்மையாக கண்டித்துள்ளனர்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த  ஹாங்காங் பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.

ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கடந்த மாதம் அறிவித்தார்.

இந்நிலையில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை  முழுமையாக ரத்து செய்யுமாறு  ஹாங்காங்கில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in