

வாஷிங்டன்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் முதல்முறையாக அமெரிக்கா சென்றார். அவரை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முதல்முறையாக அவர் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார்.
சிக்கன நடவடிக்கையாக தனி விமானத்தை தவிர்த்து பயணிகள் விமானத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றார். அங்கு அவரை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை. அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானியர்கள் மட்டுமே உற்சாக வரவேற்பு அளித்தனர். இம்ரான் கான் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் நட்சத்திர ஓட்டலில் தங்காமல் பாகிஸ்தான் தூதரின் இல்லத்தில் இம்ரான் கான் தங்கியுள்ளார். காரை தவிர்த்து விமான நிலையத்தில் இருந்து ரயில் மூலம் தூதரின் வீட்டுக்கு சென்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் இன்று சந்தித்துப் பேச உள்ளார். அப்போது தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.