Last Updated : 29 Jul, 2015 12:25 PM

 

Published : 29 Jul 2015 12:25 PM
Last Updated : 29 Jul 2015 12:25 PM

நேபாள காதிமை திருவிழாவில் விலங்குகளை பலியிட தடை

நேபாளத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், உலகின் மிகப்பெரிய விலங்குகளை பலியிடும் திருவிழாவாகக் கருதப்படும் காதிமை கோயில் திருவிழாவில் இனி விலங்குகளை உயிர் பலி கொடுக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 300 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த திருவிழா சடங்குக்கான தடையை கோயில் அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. பக்தர்கள் யாரும் பலி கொடுக்க விலங்குகளை எடுத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் தலைவர் ராம் சந்திர ஷா பேசுகையில், "விலங்கு பலியை நிறுத்த வேண்டும் என்ற அதிகாரபூர்வ முடிவை காதிமை கோயில் அறக்கட்டளை எடுத்துள்ளது. உங்களது உதவியுடன் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காதிமை திருவிழாவில் எந்த ரத்தமும் சிந்தாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும், 2019-ஆம் ஆண்டு விழாவை வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கான தருணமாக மாற்றலாம்.

தங்கள் வாழ்வில் முன்னேற்றம் வர வேண்டும் என்ற நம்பிக்கையில், பல தலைமுறைகளாக, பக்தர்கள், தேவி காதிமைக்காக விலங்கு பலி தந்து வருகின்றனர். ஒவ்வொரு உயிர் பலியும் நம் இதயத்தை கனக்கச் செய்துள்ளது. இந்த பழைய பழக்கத்தை மாற்றும் நேரம் வந்துவிட்டது. பலி மற்றும் வன்முறைக்கு மாற்றாக அமைதியான வழிபாட்டையும், கொண்டாட்டங்களையும் நடத்தும் நேரம் வந்துவிட்டது" என்றார்

முடிவுக்கு வரவேற்பு

விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் இந்த முடிவினை வரவேற்றுள்ளனர். "கருணை உள்ளங்களின் வெற்றி இந்த முடிவு. எண்ணற்ற விலங்குகளை இது காப்பாற்றும். கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் பொதுமக்கள் இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள அனைவரிடத்திலும் இந்த செய்தியை எடுத்துச் செல்வது பெரிய காரியமாக இருக்கும் என்பதையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.

இந்த விழாவுக்காக இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு விலங்குகளை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்து, கவுரி மௌலேகி (சர்வதேச மனித சமூக அமைப்பு மற்றும் 'விலங்குகளுக்காக மனிதர்கள்' அமைப்பின் ஆலோசகர்) கூறும்போது, மிருக பலி பிற்போக்குத்தனமான பழக்கம். நவீன உலகில் எந்த ஒரு நாடும் இதை ஊக்குவிக்கக் கூடாது" என்றார்.

இந்த விலங்கு பலியை எதிர்த்து வரும், நேபாள விலங்குகள் நல அமைப்பின் நிறுவனர் மனோத் கவுதமும் இந்த முடிவினை வரவேற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x