

இந்தோனேசியாவின் தீவுப் பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பாலியில் உள்ள கோயில்கள் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து இந்தோனேசிய அதிகாரிகள் தரப்பில், “ இந்தோனேசியாவின் பாலி, கிழக்கு ஜாவா, லோம்புக் ஆகிய தீவுப் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 91 கிலோ மீட்டர். இந்த நிலநடுக்கம் காரணமாக பாலியில் உள்ள கோயில்கள், கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை இந்தோனேசிய தேசியப் பேரிடம் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கிழக்கு இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.3 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலுகு தீவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின என்பது குறிப்பிடத்தக்கது.