

சிரியாவில் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, “ சிரியாவின் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியான அலெப்போவில் தீவிரவாதிகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த அரசுக் கட்டிடங்களும் பாதிப்புக்குள்ளாகின. தீவிரவாதிகள் திங்கட்கிழமை முதல் இப்பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரிய அரசுப் படைகளும் தீவிரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.
முன்னதாக, சிரியாவில் அரசுப் படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ரஷ்யா உதவி வருகின்றது. இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் சண்டையிட்டு வருகின்றது.
இதில் பெரும்பாலான இடங்களை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் மீதமுள்ள இடங்களைக் கைப்பற்ற தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ஆயிரக்கணகான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.