

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி, பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியா தவறான வழிமுறையை கையாண்டுவிட்டதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை (ஆம்னெஸ்டி) கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச பொது மன்னிப்பு சபையின் நிர்வாக இயக்குனர் ஆகர் பட்டேல் கூறும்போது, "கொலை தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு கொலையை இந்திய அரசாங்கம் இன்று காலை நிகழ்த்தியுள்ளது.
இந்த தூக்கு தண்டனை 1993ல் நடந்த மும்பை குண்டுவெடிப்புக்கு நியாயத்தை அளிக்காது. பயங்கரவாதத்தை எதிர்க்க தவறான வழிமுறையை கையாளப்பட்டுவிட்டது.
நீதி நெறிமுறையின் வழிகாட்டுதலின் கீழ் இது நடந்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மரண தண்டனையை அதிகபட்ச குற்றம் நடப்பதை தவிர்க்கும் வழிமுறையாக அதிகாரிகள் நினைக்கின்றனர்.
அந்த வகையில், அவர்கள் விசாரணை முறையை மேம்படுத்துவது, குற்றவாளிகளிடன் நடத்தப்படும் விசாரணை முறை மற்றும் குற்றவாளியின் குடும்பத்தினரை கருத்தில்கொள்வது போன்ற பல விஷயத்தை தவிர்த்துவிடுவதை தேர்வு செய்கின்றனர்" என்றார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமனுக்கு வியாழக்கிழமை காலை நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
யாகூப் மேமன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடைசி மணி நேர சட்ட முயற்சிகள் அனைத்தும் பலன் தராது போன நிலையில், அவர் தூக்கிலிடப்பட்டார்.