

இரண்டு மாத காலம் தன் படைக்கு ஓய்வு கொடுத்தார் அலெக்ஸாண்டர். ஆனால் இதைத் தொடர்ந்து மழைக் காலம் வந்து விட்டது. ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.
அலெக்ஸாண்டர் ஜீலம் நதியின் ஒரு புறத்தில் தன் படையினருடன் கூடாரத்தில் தங்கியிருக்க, எதிர்ப்புறத்தில் கேகய மன்னனின் தளபதியும் வேவுப் படைகளும் இவர்களது நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்தன.
வெள்ளத்தில் அந்த இடத்தில் படையுடன் நதியைக் கடந்தால் தாக்குதல் பலமாக இருக்கும் என்பதை உணர்ந்தார் அலெக்ஸாண்டர். வேறொரு திட்டத்தைத் தந்திரமாகத் தீட்டினார்.
தன்னைப் போலவே வேறொருவனுக்கு வேடமிட்டார். பிறகு சப்தமில்லாமல் இரவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக தன் படையினரை ஜீலத்தின் மற்றொரு பகுதிக்கு வரவழைத்துக் கொண்டார்.
அலெக்ஸாண்டர் ஒரே இடத்தில் இருப்ப தாக கேகய நாட்டு ஒற்றர்கள் தகவல் தெரிவித்துக் கொண்டிருக்க, அலெக்ஸாண்டர் அந்தக் கூடாரத்திலிருந்து 17 மைல் தொலைவில் அமைந்திருந்த பகுதிக்குச் சென்று விட்டிருந்தார். அந்தப் பகுதி ஜலால்பூர். அங்கிருந்து ஜீலம் நதியை எளிதாகக் கடக்க முடியும் என்று கணித்திருந்தார் அலெக்ஸாண்டர். 5,000 குதிரைகள் மற்றும் 10,000 காலாட் படையினரோடு இரவோடு இரவாக ஜீலம் நதியை கடக்க முடிவெடுத்தார்.
தாமதமாகவே இதை உணர்ந்தாலும் கேகய மன்னன் புதிய பகுதிக்கு தன் படையை அனுப்பத் தொடங்கினார்.
அலெக்ஸாண்டரின் சேனைக்கு வேறொரு பிரச்சினை உண்டானது. அவரது குதிரைப் படையினர் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றாலும், யானைப் படையை அவர்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை. கேகய மன்னனின் 200க்கும் மேற்பட்ட போர் யானைகளைக் கண்டதும் அலெக்ஸாண்டர் சைனியத்தின் குதிரைகள் மிரண்டன. எனவே குதிரை வீரர்கள் குதிரைகளைவிட்டு இறங்கி கால்நடையாகவே சென்று யானைகளைத் தாக்க வேண்டியிருந்தது. அப்போது பல வீரர்கள் யானைகளின் காலடியில் மிதிபட்டு இறந்தனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் யானைப் படை திடீரென உன்மத்தம் கொண்டது. யார் தனது படை, யார் எதிரிப்படை என்ற வேறுபாடு அறியாமல் செயல்பட்டன. இதன் காரணமாக கேகய நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள்கூட தங்கள் தரப்பு யானைகளாலேயே இறக்க நேரிட்டது.
‘ஜீலம்’ யுத்தம் என்று சரித்திர ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்ட இந்தப் போர் சுலபத்தில் ஓய்வதாக இல்லை. கேகய மன்னர் பர்வதேஷ்வரன் மிகவும் வீரத்தோடு போரிட்டார். என்றாலும் எப்போதும் வெற்றிகளையே சுவைத்த அலெக்ஸாண்டர் அப்போதும் வெற்றி பெற்றார்.
ஆனாலும் கேகய மன்னனைப் பற்றி அவர் மனதில் ஒரு நல்ல கருத்து உருவாகி யிருந்தது. போரில் அவன் படை சளைக் காமல் இறுதிவரை திறமை காட்டிய விதம் அலெக்ஸாண்டரைக் கவர்ந்திருந்தது. எனவே கைவிலங்கிடாமல் பர்வதேஷ்வரனை (போரஸை) அழைத்து வரக் கட்டளையிட்டார் அலெக்ஸாண்டர். ஏழு அடி உயரம் கொண்ட ஆஜானுபாகுவான கேகய மன்னனின் முகத்தில் கலக்கமே இல்லாதது அலெக்ஸாண்டருக்கு வியப்பை அளித்தது.
‘‘போரஸ், உங்களை எப்படி நடத்த வேண்டும்?’’ என்று கேட்டார் அலெக் ஸாண்டர். பளிச்சென வந்தது பதில். ‘‘ஒரு மன்னனை மற்றொரு மன்னன் எப்படி நடத்து வானோ அதுபோல் நடத்த வேண்டும்’’.
‘‘அப்படியே ஆகட்டும். உங்களுக்கான மரியாதை குறையாது’’ என்றார் அலெக் ஸாண்டர். கூடவே ‘’உங்கள் நாட்டை நீங்களே ஆளலாம். ஆனால் என் பெயரில் அங்கு ஆட்சி நடக்க வேண்டும்’’ என்றும் கூறினார். போரில் தோற்ற கேகய மன்னனுக்கு வேறு மாற்று இல்லை.
ஆனால் எதிர்பாராத விதத்தில் அலெக்ஸாண்டருக்கு வேறொரு ‘தோல்வி’ காத்திருந்தது. கிரேக்க வீரர்கள் தாங்கள் இனி தொடர்ந்து போரிடப் போவதில்லை என்றார்கள். அலெக்ஸாண்டரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. ‘‘மகத நாட்டை மட்டும் நம் கைவசம் கொண்டு வந்து விடலாம். பிறகு கிரேக்கத்துக்குத் திரும்பலாம்’’ என்றார்.
அலெக்ஸாண்டரின் நீண்ட நாள் கனவு அது. மகதம் பரந்து விரிந்த நாடு. (கிழக்கில் மேற்கு வங்காளத்திலிருந்து மேற்கே பஞ்சாப் வரை படர்ந்த பகுதி மகதம். தெற்கே விந்திய மலைப் பகுதி வரை விரிந்திருந்தது அது). அதன் அண்டை நாடான காந்தாரம் தானாகவே அலெக்ஸாண்டர் பிடியில் வந்துவிட்டது. இந்தச் சூழலில் பிரம்மாண்டமான மகதமும் தன் வசம் வந்துவிட்டால்? நினைப்பே இனித்தது அலெக்ஸாண்டருக்கு. ஆனால் அவன் படையினருக்கு இந்தத் தகவல் பெரும் கசப்பை அளித்தது.
இதற்கிடையில் அலெக்ஸாண்டரின் தந்தை பிலிப் கொலை செய்யப்பட்டார். மாசிடோனியாவின் பிரபுக்களில் ஒருவர் அலெக்ஸாண்டரின் தந்தையை திருமண நிகழ்ச்சி ஒன்றில் படுகொலை செய்தார். கொலை செய்தவரையும், அவரது கூட்டாளி களையும் அலெக்ஸாண்டரின் நண்பர்கள் வளைத்துப் பிடித்து உடனடியாகக் கொன்றனர்.
என்றாலும் அலெக்ஸாண்டர் மீது சந்தேக நிழலைப் பாய்ச்சுகிறார்கள் சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள். ‘கொலை செய்தவர் களை மாசிடோனியாவின் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கலாம். ஏன் அப்படிச் செய்யவில்லை? காரணம் இந்தக் கொலை திட்டத்தை தீட்டியதே அலெக்ஸாண்டர்தான். நீதிமன்றத்தில் இது குறித்து கொலைகாரர்கள் உளறிவிடக் கூடாது என்பதால்தான் இந்தப் படுகொலைகள்’ என்கிறார்கள்.
(உலகம் உருளும்)