நாட்டின் நெருக்கடியை டிசைனில் சுட்டிக்காட்டும் கிரீஸ் கேக்!

நாட்டின் நெருக்கடியை டிசைனில் சுட்டிக்காட்டும் கிரீஸ் கேக்!
Updated on
1 min read

கிரீஸில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் விதத்திலான கேக் ஒன்று அந்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடான கிரீஸின் நிதி நெருக்கடி உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இதனை முன்னெச்சரிக்கையாக கொண்டு மற்ற வளர்ந்த நாடுகள் செயல்பட வேண்டும் என்ற எச்சரிக்கை ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் கிரீஸ் மீளாத் துயரத்தில் உள்ளது. கடனை சமாளிக்க அந்த நாடு எதிர்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கையால் அங்குள்ள மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 முதல் 20 மடங்கு அதிக விலை செலுத்தி பொருட்களை மக்கள் வாங்குகின்றனர். தங்களது நாட்டின் நிலையை கற்பனைத் திறனுடன் வெளிப்படுத்தும் விதமாக கேக் ஒன்றை தலைநகர் ஏதென்ஸில் உள்ள சிறிய பேக்கரி நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு ரொட்டித் துண்டுக்காக 3 பெரும் 'முதலைகள்' போட்டிப் போட்டு பிய்த்து எடுக்கும் விதத்தில் அந்த கேக் உள்ளது. அந்த 3 முதலைகளும் கீரீஸுக்கு நிபந்தனைகளை விதித்த நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதியத்தையும் சுட்டிக் காட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி நிதியமைச்சர் வொல்ஃப்கேங்க் ஷோபுல், சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கியின் தலைவர் மரியோ தார்கி ஆகியோரை முதலைகளாக சித்தரித்து, அவர்கள் மூவரும் ஒற்றை ரொட்டித் துண்டை உற்று நோக்கும் விதத்தில் அந்தக் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிரீஸின் பொருளாதார நிலை குறித்து தினந்தோறும் செய்திகள் வெளியாகும் நிலையில், இன்ஸ்டாகிராமில் உலா வரும் கிரீஸ் மக்கள் தரப்பு வெளிப்பாட்டை உணர்த்தும் இந்த கேக் குறித்த பகிர்வுகள் கிரீஸ் நாட்டு மக்களை மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரை சற்று சிந்திக்கச் செய்துள்ளது.

"இதன் மூலம் எங்களை நாங்களே ட்ரால் செய்து கொள்கிறோம். நகைச்சுவையாக இதனை உருவாக்கினோம். வேறு பயனில்லை" என்றார் க்ரி க்ரி என்ற அந்த பேக்கரியின் நிறுவனர் கயார்காஸ் கேடசொலீஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in