இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில், நேற்று (ஏப்.2) இரவு 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
வடமேற்கு பாகிஸ்தானின் பன்னு மாவட்டத்தின் டோமெல் தாலுகாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரில் வந்த நபர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு உடனடியாக துப்பாக்கிச் சூடும் நடந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது. இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.
இந்த குண்டுவெடிப்பில் அருகிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்தன. காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியின் நிலைமையை தொடர்ந்து மதிப்பிட்டு வருவதால், அவசரகால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காவல் துறையின் தகவல்களின்படி, மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திலிருந்து ஐந்து உடல்களை மீட்டுள்ளன. இறந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் அடங்குவர். இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 13 பேரில், நான்கு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததோடு, உயிரிழப்புகளுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.