ரஷ்ய தொழிலதிபர் உதவியுடன் ரூ. 630 கோடி செலவில் வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆய்வு: ஸ்டீபன் ஹாக்கிங் தொடங்கி வைத்தார்

ரஷ்ய தொழிலதிபர் உதவியுடன் ரூ. 630 கோடி செலவில் வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆய்வு: ஸ்டீபன் ஹாக்கிங் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

அண்டவெளியில் வேற்று கிரகவாசிகள் வசிக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூரி மில்னர் 10 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.630 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் அண்டவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இந்த ஆய்வைத் தொடங்கி வைத்தார்.

பெரும் நன்கொடையாளரான ரஷ்யாவைச் சேர்ந்த யூரி மில்னர், ஆண்டுதோறும் 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 19 கோடி) மதிப்பிலான விருது களை இயற்பியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்காக வழங்கி வருகிறார். இவர் தற்போது, வேற்று கிரக ஆய்வுகளின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி யுள்ளார்.

நெடுங்காலமாகவே வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வந்தாலும், அது முழுமையானதாக இல்லை. அவ்வப்போது கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படா தவையாக உள்ளன.

எனவே, அதி நவீன கருவிகளின் உதவியுடன் வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள சுமார் ரூ.630 கோடிகளை நன்கொடையாக அறிவித்துள் ளார் யூரி. இந்த ஆய்வுகள் அடுத்த 10 ஆண்டுகள் நடைபெறும்.

இந்த பால்வெளியில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் உள்ளனவா, நம்மைப்போன்ற வர்கள் வசிக்கிறார்களா என்ற கேள்விக்கு விடை காண்பதாக இந்த ஆய்வு இருக்கும் என யூரி தெரிவித்துள்ளார்.

இதற்காக அதி நவீன தொலை நோக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர் பிராங்க் டிராக், அண்டவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், யூரி ஆகியோர், கடந்த திங்கள்கிழமை ராயல் சொசைட்டி ஆப் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர் டான் வெர்திமெர் கூறும்போது, “இது எனது பெருங்கனவுக்கு அப்பாற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வேற்றுகிரகவாசிகள் யாரேனும் இருந்தால் அவர் களைத் தொடர்பு கொள்வதற்கான குறுஞ்செய்தியை வடிவமைப் பவர்களுக்கு சுமார் ரூ.6.3 கோடி பரிசுத் தொகையையும் யூரி அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in