

ஜப்பானில் ஓடும் புல்லட் ரயிலில் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். இதனால் அப்பெட்டியில் தீப்பிடித்தது. இதில் காயமடைந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். மேலும் பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் இருந்து ஓசாகாவுக்கு நேற்று அதிவிரைவு புல்லட் ரயில் ஒன்று புறப்பட்டது. இதில் சுமார் ஆயிரம் பயணிகள் வரை இருந்தனர். அப்போது கழிவறைக்கு அருகே சென்ற ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அப்போது ரயில் 70 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் தீ அந்த பெட்டி முழுவதும் பரவத் தொடங்கியது. எனினும் தீ அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பியதை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் அவசரமாக இறங்கி ஓடினர். ரயிலில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
அந்த நபர் தீக்குளித்த பெட்டியில் பாதி அளவு வரை தீ பரவியது. இந்த சம்பவத்தில் தீக்குளித்த நபரும் மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். மூச்சுத் திணறலாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தனிப்பட்ட நபரின் தற் கொலை முயற்சியா அல்லது தீவிர வாத நடவடிக்கையா என்பது தெரியவில்லை. தீக்குளித்த நபருக்கு சுமார் 70 வயது இருக்க லாம் என்று தெரிகிறது. இதில் உயிரிழந்த பெண்ணுக்கு சுமார் 50 வயது என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஜப்பானின் பல பகுதிகளில் நேற்று புல்லட் ரயில் சேவை முடங்கியது. இதையடுத்து ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
தீக்குளித்த நபர் ரயிலை அவசர மாக நிறுத்த வைக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்திய பிறகே தீக்குளித்தார் என்று தெரிகிறது. எனவேதான் ரயிலின் வேகம் அப்போது குறைந்துள்ளது. முழு வேகத்தில் சென்றபோது ரயிலில் தீப்பற்றினால் உயிரிழப்பு அதிகமாக இருந்திருக்கும்.