

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தலைமையில் இதுவரை 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் யுன் பயூங் சே தெரிவித்துள்ளார்.
அதேப் போல கிம் உன்னின் தந்தை கிம் ஜோங் 10 அதிகாரிகளுக்கு அவரது ஆட்சிக் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிம் உன்னின் அச்சுறுத்தலான ஆட்சி காலத்தின் பாதிப்பு கணிசமான அளவில் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தத் தகவலை தென் கொரிய உளவு அமைப்பு உறுதி செய்துள்ளதாகவும், ஆனால் இந்தத் தகவல் பெறப்பட்ட விவரங்களை அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் வட கொரியாவின் ராணுவ தளபதிக்கு மிகவும் கொடூரமான முறையிலான மரண தண்டனையை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் விதித்தார்.
விமானத்தை சுடும் துப்பாக்கியால் அவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் கிம் உன் தலைமையிலான வட கொரிய ராணுவம் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.