

உலகிலேயே அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் சீனா, தன் நாட்டின் பொது இடங்களில் சுற்றுச்சூழலால் இந்திய நகரங்களுக்கு ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை விழிப்புணர்வு விளம்பரங்களாக ஆங்காங்கே காட்சிப் படுத்தியுள்ளது.
மும்பை, அலகாபாத் உள்ளிட்ட நகரங்களின் நிலைகளை படமாக சித்தரித்து விழிப்புணர்வு வாசகங்களுடன் சீனா வாங்ஃபியூஜிங் உள்ளிட்ட சில நகரங்களில் தெருக்களிலும் சாலைகளிலும் வைத்துள்ளது.
இந்திய நகரங்களில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள், நகரங்களின் தூசிச் சூறைக்காற்று ஆகிய விவகாரங்களை சுட்டிக் காட்டியுள்ள இத்தகைய விளம்பர விழிப்புணர்வு திட்டம் மூலம் தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறது சீனா. அதே போல் சுற்றுசூழல் மாசு என்ற சவாலை எதிர்கொள்ளும் விதங்களையும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் எடுத்துரைக்கிறது.
இந்த விளம்பரங்களில் ஒன்றில், மும்பை நகர இளைஞர்கள் விளையாட இடமின்றி தவிப்பதை சித்தரிப்பதாகும், “மும்பை கடற்கரை பிளாஸ்டிக் குப்பையாகக் கிடக்கிறது. தங்களது இளம் வயதுக்குரிய ஆற்றல்களை வெளிப்படுத்த துடிக்கும் இளைஞர்கள் பிளாஸ்டிக் குப்பைக் குவியல் மீது விளையாடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறப்பட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் குப்பைக்குவியலின் மீது விளையாடும் சிறுவன் படம் ஒன்றையும் தீட்டியுள்ளது.
இன்னொரு விளம்பரத்தில் அலகாபாத் சித்தரிக்கப்பட்டுள்ளது:
இந்திய நகரங்களில் ஒன்றான அலகாபாத்தில் பெரிய அளவில் தூசிப்புயல் தாக்கியது. சாலைவாசிகள் ஒருவரையொருவர் பார்க்கக் கூட முடியவில்லை.
இதன் படத்தில் 4 பேர் தூசிக்காற்றை எதிர்கொள்வது தீட்டப்பட்டு, அவர்களுக்கு முன்பாக ‘கங்கை நதியை காப்பாற்றுங்கள்’ என்ற எழுதப்பட்ட வாசகம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான படங்கள் வாங்ஃப்யூஜிங் சாலைகள் நெடுகிலும் இந்திய சுற்றுச்சூழல் நாசத்தைச் சித்தரித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலிய வறட்சி நிலையையும் சித்தரித்து படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
புவிவெப்பமடைதலால் ஏற்படும் சீரழிவுக்கு முதன்மை காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாசடைந்த காற்று காரணமாக, உயிரிழப்பு மற்றும் சுகாதாரச் சீர்கேடு ஆகியவற்றால் ஏற்படும் இழப்பு என்பது சீனா மற்றும் இந்தியாவில் 1.89 ட்ரில்லியன் டாலர்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளது.